எல்லாம் நன்மைக்கே - சிறுகதை - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 14, 2020

எல்லாம் நன்மைக்கே - சிறுகதை

எல்லாம் நன்மைக்கே - சிறுகதை 


சத்தியபுரி என்ற நாட்டை வரகுணன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் குடிமக்களிடம் அன்பு கொண்டவன்.  மக்களுக்கு சிறு துன்பம் ஏற்படுவதையும் அவனால் தாங்கிக்கொள்ள இயலாது.  அதிக மழை, புயல் காற்று போன்ற இயற்கையின் சீற்றத்தை தாங்குவதற்கும்,  அதில் இருந்து மக்களைக் காக்கவும் மன்னன் ஒருபோதும் தவறியதில்லை.  

மன்னன் தனக்கு அந்தரங்க ஆலோசகராகவும் உதவியாளராகவும் இருவரை அமர்த்தி கொண்டிருந்தார். அதில் நித்தியானந்தன் என்பவன் மன்னனோடு எப்போதும் உடன் இருப்பான்.  சத்தியசீலன் மன்னன் அழைக்கும்போது வந்து உடன் இருப்பதும்,  போக அனுமதி அளித்தால் தான் போவது வழக்கம்.  சத்யசீலனைக் காட்டிலும் நித்தியானந்தன் மன்னனோடு கழிக்கும்பொழுது அதிகமாக இருக்கும். 

ஆகவே மன்னரின் ஒவ்வொரு நாள் வேலையும் நித்யானந்தனுக்கு தெரியும். அதனால் மன்னனின் மனம் அறிந்து நடப்பதில் அவனுக்கு எப்போதும் கஷ்டமே ஏற்பட்டதில்லை.  மன்னன் எந்த ஒரு செயலை பற்றி சிந்தித்தாலும் பேசினாலும் முடிவில் நித்யானந்தாவிடம் அதைப்பற்றி தெரிவிப்பான். அப்போது நித்தியானந்தன்  "எல்லாம் நன்மைக்கே"  என்று சொல்லுவான். அது சில சமயம் மன்னன் மனதை சந்தோஷப்படுத்தும். சில சமயம் கோபப்படுத்தும். 

இந்த முடிவு சரியானது இல்லை.  வேறு விதமாக செய்திருக்கலாம் என்று நித்தியானந்தன் கூறாமல் "எல்லாம் நன்மைக்கே" என்று கூறிவிடுவது மனதுக்குப் பிடிக்காமல் போயிற்று.  காரண காரியங்களை ஆராயாமல் "எல்லாம் நன்மைக்கே"என்று சொல்வது பொறுப்பற்ற தன்மை என்று மன்னன் மனம் எண்ணியது.  அவனை தன்னுடன் வைத்து இருப்பதால் தனக்கு எந்த நன்மையும் இல்லை என்று மன்னனுக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

ஒருநாள் மன்னன்,  நித்தியானந்தன்,  சத்தியசீலன் மற்றும் சிலரோடு நண்பகல் உணவு உட்கொண்டான்.  பல விஷயங்களைப் பற்றி பேசி சிரித்தவாறு உணவு உட்கொண்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைவரும் பிரிந்து சென்றனர். உணவு உட்கொண்டபின் மன்னன் கனி வகைகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம்.  ஆகவே நித்தியானந்தன் கனி வகைகளை எடுத்து வந்து மன்னன் எதிரே வைத்துவிட்டு பழச்சாறு பானங்கள் பருக கிண்ணங்களை எடுத்து வர மறுபுறம் சென்றான். மன்னன் பழ வகைகள் இருந்த தட்டில் இருந்து ஒரு கனியை கையிலெடுத்து பின் அதை துண்டுகளாக்கி சாப்பிட நினைத்து தட்டில் இருந்த கத்தியை எடுத்து பழத்தை வெட்ட ஆரம்பித்தான். 

கூர்மையான கத்தி மன்னனின் இடது கை கட்டை விரலில் மேற்பகுதியை சீவியது போல் வெட்டி விட்டது.  வெட்டப்பட்ட விரலில் ரத்தம் பெருக்கெடுத்தது.  கிண்ணங்களை ஏந்தி வந்த நித்தியானந்தன் மன்னனின் நிலையை பார்த்து கிண்ணங்களை வீசி எறிந்துவிட்டு துடிதுடித்து ஓடிவந்தான். மன்னனை ஆசனத்தில் உட்கார வைத்துவிட்டு முதல் உதவி செய்ததுடன் உடனே அரண்மனை மருத்துவரையும் வரவழைத்தான்.  வைத்தியர் வந்து பார்த்தார்.  வெட்டுப் பட்ட காயம் ஆழமாக இருந்தது.  முதலில் ரத்தப் பெருக்கை கட்டுப் படுத்த மருந்து வைத்து கட்டினார்.  பின்பு ரத்தம் அதிகம் வெளிப்பட்டு விட்டதால் மன்னனுக்கு ஏற்பட்ட சோர்வை நீக்க மருந்து கொடுத்தார்.  

சில நாட்கள் சென்றன.  கத்தி பட்ட காயம் விரைவில் குணமாக வில்லை.  கை வலி அதிகமாக இருந்தது.  காய்ச்சலும் அதிகரித்தது.  மேலும் சில மருத்துவர்கள் வந்தனர்.  எல்லாரும் கூடி ஆலோசித்தனர்.  வெட்டுப்பட்ட கட்டை விரலில் ஒரு சிறு பகுதி அகற்றிவிட்டால் மன்னனின் கஷ்டம் நீங்கும் என்று முடிவு செய்தனர். 

ஆனால் இதை மன்னரிடம் நேரடியாக சொல்ல அஞ்சினர்.  நித்யானந்தரிடம் நிலைமையை எடுத்துக்கூறி மன்னனிடம் விளக்கும் படி கூறினர்.  மன்னன் படும் துன்பத்தை பார்த்துக்கொண்டிருந்த நித்தியானந்தன்,  இதற்காக நீங்கள் தயங்க வேண்டாம்.  எந்த சிகிச்சை மன்னனின் துன்பத்தை குறைக்கும் அதை மேற்கொள்ளுங்கள்.  நான் மன்னனிடம் சொல்கிறேன்.  "எல்லாம் நன்மைக்கே" என்றான். 

மருத்துவர்களும் மன்னனுக்கு தக்க சிகிச்சை அளித்தனர்.  அதன்பின் மன்னன் குணமடைந்தான். ஆனால் இடது கை கட்டை விரல் சற்று குட்டையாகவும் சூம்பிப்போனது போல் ஆகிவிட்டது.  அதை பார்க்கும்போது மன்னனின் மனம் துக்கப்படும்.  ஒருநாள் தன் கைகளின் அழகு குறைந்து போனது பற்றி மன்னன் நித்யானந்தரிடம் வருத்தப்பட்டு கொண்டபோது "எல்லாம் நன்மைக்கே" மன்னா,  இதற்காக நீங்கள் வருத்தம் வேண்டாம் என்றான்.

 மன்னனுக்கு எல்லை மீறி கோபம் வந்தது.  எத்தனை தடவை நித்தியானந்தன் இம்மாதிரி சொல்லி இருக்கிறான்.  ஆனால் இம்முறை "எல்லாம் நன்மைக்கே" என்று சொல்ல நித்தியானந்தன் வாயில் இருந்து வந்ததும் அவளை ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டார்.  

என் மனம் புரியாமல் என் மன வருத்தம் புரியாமல் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய்.  எத்தனையோ முறை நீ இப்படி சொல்லி இருக்கிறாய்.  பலமுறை என் மனம் ஒத்துக் கொள்ளாத நிலையிலும் உன்னுடைய இந்த செயலை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  "எல்லாம் நன்மைக்கே"  "எல்லாம் நன்மைக்கே"  என்று சொல்லி சொல்லி என்ன நன்மையைக் கண்டாய்?  என் கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது எனக்கு நன்மையா?  உனக்கு நன்மையா?  அர்த்தமற்ற உன் பேச்சு என்னை பல சமயங்களில் துன்புறுத்தி இருக்கிறது.  

ஆகவே இன்று இந்த நிமிடமே உன்னை வேலையில் இருந்து நீக்குகிறேன்,  என்று கடிந்து கொண்டு நித்யானந்தரை மன்னனின் ஆலோசகர் என்று பதவியிலிருந்து நீக்கினான்.  நாட்டை விட்டு செல்லும்படி உத்தரவிட்டார்.  மன்னனின் கட்டுக்கடங்காத கோபத்தையும் அதனால் தன் பதவி பறிபோனதும் கண்ட நித்யானந்தன் "எல்லாம் நன்மைக்கே"  என்று கூறிவிட்டு சென்றான்.  

நித்தியானந்தனின் பிரிவு மன்னனுக்கு சில நாட்கள் கஷ்டமாக இருந்தது.  பிறகு நாளடைவில் பல வேலைகளினால் அவனைப்பற்றிய நினைவு மறைந்து போய்விட்டது. பல மாதங்களுக்குப் பின் மன்னன் வேட்டைக்குச் செல்ல  விரும்பினான்.  மன்னன் விருப்பம் ஆயிற்றே.  மறுநாளே மன்னன் வேட்டைக்கு செல்லவும்,  உடன் வர படை வீரர்களும் வனத்தில் தங்க ஏற்பாடுகள் விரைவில் ஆயத்தமாயின. 

முதல் நாள் வனத்தில் தங்கி பொழுதை எல்லாரும் உல்லாசமாக கழித்தனர்.  மறுநாள் மன்னன் கூறினான்.  நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் தனியாக சென்று வேட்டையாடுவோம்.  ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு மிருகத்தை வேட்டையாடிக் கொண்டு வர வேண்டும்.  என்ன சரியா? என்றான். எல்லாரும் ஒப்புக் கொண்டு,  தனித்தனியே பிரிந்தனர். 

சத்தியசீலன் மன்னனிடம்,  மன்னா "தாங்கள் தனியாக செல்ல வேண்டாம்"  நான் வேண்டுமானால் உங்களுடன் வருகிறேன்"  என்று தயங்கியவாறு மெல்லச் சொன்னான்.  மன்னன் பெரிதாகச் சிரித்தான்.  எல்லாரையும் தனியாகப் போகச் சொல்லிவிட்டு நான் மட்டும் உன்னை துணைக்கு அழைத்து செல்வதா?  நன்றாக இருக்கிறது.  நீ தனி வழி போனால், நான் வேறு வழி போகிறேன்.  மாலையில் எல்லோரும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு அடர்ந்த அந்த காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தான்.  

உற்சாகத்தோடு மன்னன் காட்டுப் பகுதிக்கு வந்துவிட்டான்.  ஆனால் ஆபத்தான சூழ்நிலையை கண்டதும் அறிவு கலங்கி போயிற்று.  எவரையும் உடன் அழைத்துவர தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.  தோளில் தொங்கிய அம்பும் வில்லும் பாரமாக தோன்றிவிட்டது.  வேட்டையாடுவதை மறந்து இப்போது தன்னுயிரைக் காத்துக் கொண்டால் போதும் என்று சிந்திக்கத் தொடங்கினான். 

காட்டு மிருகங்களின் ஒலியிடையே திடீரென்று முரசு சத்தம் தொலைவில் இருந்து கேட்டது.  உன்னிப்பாக கவனித்தான்.  கையில் தீப்பந்தம் ஏந்தி தம்பட்டம் அடித்துக் கொண்டு சிலர் கூட்டமாக வருவது தெரிந்தது.  மன்னன் கவலை நீங்கியது என்று பெருமூச்சு விட்டான். காட்டின் உட்பகுதியில் இருந்து வெளியே செல்ல இவர்களிடம் உதவி கேட்கலாம்.  மிருகத்தை வேட்டையாட விட்டாலும் தன் உயிர் தப்பி தன் படைவீரர்களோடு போய் சேர்ந்துவிடலாம் என்று நம்பினான். 

அதனால், தான் இருந்த பகுதியிலிருந்து து வெளிப்பட்டு வரும் ஆட்களின் நோக்கி தட்டுத்தடுமாறி நடக்க ஆரம்பித்தான்.  தீப்பந்தம் ஏந்தி வந்தவர்கள் எதிரே ஒரு மனிதன் தங்களை நோக்கி வருவதைக் கண்டார்கள்.  அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. 

காரணம்......

அவர்கள் அந்தக் காட்டிலேயே வசிக்கும் மக்கள்.  தங்கள் குலதெய்வத்திற்கு விழா எடுத்து பூஜை முடித்திருந்தார்கள்.  தங்கள் இனத்தை சேர்ந்தவரை உடலில் எல்லா லட்சணங்களும் பொருந்திய ஒரு மனிதனை குலதெய்வத்திற்கு பலியிட நினைத்திருந்தார்கள்.  தங்கள் தலைவனின் உத்தரவுப்படி ஆளைத் தேடி வந்த அவர்களின் எதிரே மாறுவேடத்தில் இருந்த மன்னன் அகப்பட்டுக் கொண்டான்.  

பூஜையின் பலனால் இவ்வளவு எளிதில் தங்கள் தேடிய ஆள் கிடைத்ததும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தது ஆர்வத்தோடு கத்திக் கொண்டும் ஆடிக் கொண்டும் அந்த மன்னனை பிடித்துக் கொண்டார்கள்.  கூட்டத்தினரின் உற்சாகத்தை முதலிய அறியாத மன்னன் அவர்கள் இழத்துச் சென்றபோது உணரத் தலைப்பட்டான். 

குரங்கின் கையில் இருந்து தப்பி கடைசியில் முதலையின் வாய்க்குள் அகப்பட்டது போல் ஆகிவிட்டது மன்னனின் நிலை.  காட்டு மிருகங்களின் உணவாகாமல் தப்பினாலும் வேறு விதத்தில் தன் உயிர் பலியாக போவது எண்ணியதும் மன்னன் மனம் மிகவும் துக்கப்பட்டது.  இவர்களிடம் இருந்து தப்பி செல்வது என்பது இயலாத காரியம்.  காட்டின் எந்த பகுதிக்கு ஓடினாலும் இவர்கள் பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள்.  அதுவும் தவிர எத்திசை நோக்கி ஓடினால் காட்டிற்கு வெளியே வர முடியும் என்பதும் அவனுக்குத் தெரியாது. ஆகவே எல்லையற்ற தன் அறியாமையை எண்ணி கலங்கி மௌனமாக நின்றிருந்தான்.

குலதெய்வத்திற்கு பலியிடுவதற்குமுன்,  அவன் உடல் ஊனமுற்றவனாக இருக்கிறானா?  என்று சோதிக்கும்படி தலைவன் கட்டளையிட்டான்.  பரிசோதித்து அவர்கள் மன்னனின் இடது கை கட்டை விரல் முனை வெட்டப்பட்டு இருப்பதை கண்டு சொன்னார்கள்.  உடனே தலைவன் இவன் தெய்வப் பலிக்குத் தகுதியானவன் இல்லை.  கட்டை அவிழ்த்து விட்டு விடுங்கள்.  அவன் எங்கு போக விரும்புகிறானோ அங்கே அவனை அனுப்பி விடுங்கள் என்று கூறிவிட்டு சென்றான்.  

அழகின் எல்லா அம்சங்களும் நிறைந்த மன்னன் கட்டைவிரல் குறைந்து போய் இருந்ததால் தான் உயிர் தப்பித்தார்.  எத்தனையோ சமயங்களில் தன் விரல் வெட்டுப்பட்டுப் போனதை எண்ணி வேதனைப்பட்டு இருந்த மன்னன் குறைபட்ட அதே விரலால் தன் உயிர் மீண்டதை  நினைத்து அதிசயித்தான். 

"எல்லாம் நன்மைக்கே" என்று சொல்லும் நித்தியானந்தனின் நினைவு வந்தது.  அரசவைக்கு வந்ததும் முதலில் நித்தியானந்தன் எங்கு இருக்கிறானோ அவனே கண்டுபிடித்து அழைத்து வருமாறு உத்தரவு பிறப்பித்தான்.  அழைத்து வருபவர்களுக்கு பரிசளிப்பதாக அறிவித்தான்.  ஓரிரு நாட்கள் சென்றன.  மன்னனுக்கு நித்தியானந்தனனக் காண வேண்டும் என்ற துடிப்பு அதிகரித்தது.  ஒரு நாள் காலை பொழுது நித்தியானந்தன் அரசனைக் காண வந்தான்.  மன்னன் மிகுந்த மகிழ்ச்சியோடு அவனை வரவேற்று நடந்தவை அனைத்தையும் கூறினான். 

மன்னன் உயிர் பிழைத்து வந்தது அறிந்து மகிழ்ந்தான் நித்தியானந்தன்.  நீ கூறியபடி "எல்லாம் நன்மைக்கே" என்ற சொல்லின் சத்திய ஒளியை உணர்ந்து அனுபவித்து விட்டேன்.  நீ ஒன்றும் முன்போல் அருகிலேயே இருக்க வேண்டும் என்றான் மன்னன்.  நித்தியானந்தன் நீங்கள் என்னைக் கோபித்துக் கொண்டு வெளியே அனுப்பியது நன்மைக்கே என்றான். 

நீ என்ன சொல்கிறாய்?  ஆமாம் மன்னா,  என்னை நீங்கள் கோபித்து வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் உங்களை தனியே  அந்த காட்டுக்குள் போக அனுமதிருக்க மாட்டேன்.  உங்கள் உடனே நான் வந்து இருப்பேன்.  கூட்டத்தினர் இருவரையும் தான் பிடித்திருப்பார்கள்.  உடல் ஊனமுற்ற என்னை நிச்சயம் பலி கொடுத்து இருப்பார்கள் இல்லையா? 

நித்தியானந்தன் நீ சொல்வது சரி அப்படித்தான் நடந்திருக்கும்.  உன்னை நான் நிரந்தரமாக இழந்திருப்பேன்,  நல்ல வேளை,  நீ தப்பித்தாய். "எல்லாம் நன்மைக்கே" என்று இப்போது தெரிகிறது என்று சொல்லி நண்பனை மார்புறத் தழுவிக் கொண்டான் மன்னன்.  தான் சொல்ல வேண்டிய "எல்லாம் நன்மைக்கே"  என்ற சொல்லை மன்னன் கூறியதும் நித்யானந்தனுக்கு சிரிப்பு வந்தது. 

No comments:

Post a Comment