தந்திரமான நரி - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, August 16, 2020

தந்திரமான நரி

தந்திரமான நரி

பசியுள்ள நரி


ஒரு அடர்ந்த காட்டில் ஒரு நரி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு நாள் பசி மிகுதியால் ஏதாவது உணவு கிடைக்காதா என்று அலைந்து கொண்டிருந்தது. அதற்கு எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  அலைந்து திரிந்தும் எதுவும் கிட்டவில்லை.  நரி அலைந்து அலைந்து மிகவும் சோர்ந்து போய் விட்டது. காட்டு வழியே தள்ளாடியபடி நடந்து வந்துகொண்டிருந்தது.  


இறந்த யானை


அப்போது தூரத்தில் ஒரு பெரிய யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்த உடனே அதன் அருகில் வேகமாக ஓடியது.  சந்தோஷம் பிடிபடவில்லை.  இவ்வளவு நேரம் நாம் அலைந்தது வீண்போகவில்லை.  பெரிய மிருகமே இரையாக கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து.  இறந்த யானையை கடித்தது.  ஆனால் யானையின் தடித்த தோலாள் கடிக்க முடியவில்லை.  நகத்தால் பிடித்துப் பார்த்தது.  அப்போதும் அதனால் கூட முடியவில்லை. 

சிங்கம்


யானையின் உடலை தன்னால் கடிக்க முடியாது என்பதை நரி புரிந்து கொண்டது.  ஆனாலும் நரிக்கு பசியாக இருந்ததால் அதனை விட்டு செல்ல மனமில்லை.  அதனால் அங்கேயே நின்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக ஒரு சிங்கம் வந்தது.  சிங்கத்தை கண்டதும் நரிக்கு  நிறைய பயம் வந்துவிட்டது.  நரி வேகவேகமாக சிங்கம் வருவதைப்  பார்த்து சிங்கராஜாவே,  நீங்கள் இந்த பக்கம் வருவீர்கள் என்று எனக்கு தெரியும். அதனால்தான் இந்த இறந்த யானையின் உடலை உங்களுக்காகப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறேன்.  நீங்கள் இதை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று அக்கறையுடன் கூறியது. 

சிங்கம் நரியை முறைத்துப் பார்த்தது.  நீ என்னை என்ன என நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் என்ன உன் போல் பயந்தவன் என்று நினைத்தாயா?  நான் எனக்கு வேண்டிய உணவை நானே அடித்துக் கொன்று  சாப்பிடுவேன். யாரோ அடித்துப் போட்ட விலங்கை சாப்பிடும் அளவுக்கு என் நிலை தாழ்ந்து விடவில்லை.  இதை நீயே சாப்பிடு என்று கர்ஜனையுடன் சொல்லிவிட்டு சென்றது சிங்கம். 

புலி


இந்த அளவுக்கு தன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு சென்றதை கண்டு நரிக்கு சந்தோஷமாக இருந்தது.  இருந்தாலும் தன்னால் யானையின் உடலை ஒன்றும் செய்யமுடியவில்லையே,  இதற்கு என்ன செய்வது என்று புரியாமல் விழித்தது.  அப்போது புலி ஒன்று அந்த பக்கமாக வந்தது.  சிங்கத்தை போல இதனை ஏமாற்ற முடியாது.  இதற்கு வேறு ஏதாவது தான் செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?  நரிக்கு ஒரு அருமையான யோசனை தோன்றியது.

புலி அருகில் வந்ததும் புலியாேரே,  நான் இறந்த யானைக்கு காவல் காத்துக் கொண்டிருக்கிறேன்.  சிங்கம் இந்த யானை அடித்துக் கொன்றுவிட்டு பக்கத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் குடித்து வர சென்றது.  அது வரும் வரை நீங்கள் வேண்டுமானால் கொஞ்சம் யானையின் உடலை சாப்பிடுகிறீர்களா என்று கேட்டது புலியிடம்.  

சிங்கம் என்ற பெயரை சொன்னதும் புலிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.  புலி நரியைப் பார்த்து இந்த யானையை சிங்கமா அடித்துப் போட்டது?  ஐயோ நான் இங்கு வந்தது சிங்கத்திற்கு தெரிந்தால் போச்சு,  சிங்கம் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடும்.  சிங்கம் வருவதற்குள் நான் ஓடிப் போய்விடுகிறேன்.  ஆளை விடுங்கப்பா என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டது. 

சிறுத்தை


அப்பாடா புலியை சமாளித்து விட்டேன்  என்று பெருமூச்சு விட்டது நரி.  சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு சிறுத்தை ஒன்று வந்தது.  அதனிடம் நரி மிகப் பணிவுடன் சிறுத்தையிடம்  உங்களுக்காகத்தான் நான் வெகு நேரம் காத்திருக்கிறேன்.  இந்த உணவை உண்ணுங்கள் என்று இறந்த யானையின் உடலை காட்டியது.  மேலும் சீக்கிரம் சீக்கிரமாக வந்து இந்த உணவை சாப்பிடுங்கள் என்று சிறுத்தையை நரி அவசர படுத்தியது.  அதற்கு நரியைப் பார்த்து ஏன் இப்படி அவசரப் படுத்துகிறாய்?  நான் சாப்பிட்டு விட்டு மீதியை உனக்கு தருகிறேன்.  பயப்படாதே என்றது.  

அதற்கு நரி நான் எனக்காக சொல்லவில்லை.  இந்த யானையை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றுவிட்டு என்னை காவல் வைத்து விட்டு குளித்து வர சென்றிருக்கிறது.  அதனால்தான் சொன்னேன்.  சிங்கம் வரும் வரை நீ சாப்பிட்டு கொண்டிரு நான் இங்கே இருந்து உனக்கு காவல்காக்கிறேன்.  சிங்கம் தூரமாக வரும்போது சொல்கிறேன் அப்போது இங்கிருந்து ஓடிவிடு என்று சிறுத்தையுடன் கூறியது.

சிறுத்தை அந்த நேரம் பசியுடன் இருந்ததால்அதற்கு சம்மதித்தது.  நரி கூறியவுடன் தன் கூரிய பற்களால் இறந்த யானையின் உடலை கிழித்தது.  யானையின் உடலை சிறுத்தை கிழித்ததும்  இனிமேல் நம்மால் சுலபமாக சாப்பிட முடியும் என்று எண்ணியது.  உடனே நரி சிறுத்தையை பார்த்து யானை வந்துகொண்டிருக்கிறது.  சீக்கிரம் ஓடிவிடு என்று கூறியது.  உடனே சிறுத்தை சிங்கத்திற்கு பயந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடி மறைந்தது.  

சந்தோஷமாக  நரி இறந்த யானையின்  உடல் அருகே சென்றது.  அந்த உடலை சிறிது சிறிதாக நெடுநாளைக்கு வைத்திருந்து சாப்பிட்டது.  இப்படி நரி தன் தந்திரத்தால் பசியை ஆற்றி கொண்டது.

கதையின் நீதி


நரியைப்போல் மற்றவர்களை நாம் ஏமாற்றிப் பிழைக்கக்கூடாது.

No comments:

Post a Comment