பஞ்சதந்திர கதைகள் மைனாவும் முயலும்
மைனாவின் வாழ்க்கை
ஒரு காட்டில் ஒரு பெரிய மரத்தின் பொந்தில் ஒரு மைனா வாழ்ந்து வந்தது. மைனா வெகுகாலமாக அங்கேயே வசித்து வந்ததால் சிறிது காலம் வெளி இடங்களில் சென்று பார்த்து வரலாம் என்ற எண்ணத்தில் புறப்பட்டு சென்றது. மைனா போகும் வழியில் ஒரு வயலை கண்டது. அந்த வயதில் தானியங்கள் நன்றாக வளர்ந்து இருந்தது. பக்கத்திலேயே நீரோடை ஓடிக்கொண்டிருந்தது. மைனாவுக்கு அந்த இடம் மிகவும் பிடித்து விட்டதால் அங்கேயே ஒரு மரத்தில் கூடுகட்டி தங்கியது.
மைனாவுக்கு அந்த தானியங்களை சாப்பிடுவதும் பக்கத்தில் நீரோடையில் சென்று குளித்து மகிழ்வதுமாக சந்தோஷமாக இருந்தது. ஒரு நாள் தானியங்கள் எல்லாம் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்ததால் அந்த வயலுக்கு சொந்தக்காரன் வயலில் உள்ள தானியங்களை அறுவடை செய்ய வந்தான்.
கூலி ஆட்கள் மூலமாக சீக்கிரத்திலேயே தானியங்களை அறுவடை செய்து முடித்து விட்டால் அதன் பிறகு மைனாவுக்கு சாப்பிட சிறிதளவு தானியங்களே கிடைத்தது. மேலும் மைனாவுக்கு அந்த இடம் அழிந்து விட்டதாலும் பழைய இடத்திற்கே செல்ல முடிவு செய்தது.
முயலின் பிடிவாதம்
உடனே மைனா அங்கிருந்து கிளம்பி பழைய இடத்தை சென்றடைந்ததும் அங்கு வந்து அந்த மரத்தில் தன்னுடைய பொந்தில் மைனா செல்ல முயலும் போது அந்த பொந்தின் உள்ளே ஒரு முயல் இருந்தது. அதை பார்த்தவுடன் மைனாவுக்கு திக்கென்றது. மைனா முயலிடம், நான்தான் பொந்தில் ரொம்ப நாளாக வசித்து வருகிறேன். இப்பொழுது வெளியிடங்களுக்கு செல்ல எண்ணி சில நாட்கள் சென்றிருந்தேன். அதற்குள் நீ வந்து என் இடத்தை பிடித்துக்கொண்டாய். இது நியாயமா? என்று கேட்டது.
முயல் மைனாவை பார்த்து என்ன நீ இங்கு வசித்து வந்தாயா? நான் தான் ரொம்ப காலமாக இங்கு வசித்து வருகிறேன். நீ வசித்த இடம் வேறு இடமாக இருக்கும். அங்கு சென்று பார் என்று கூறி விரட்டியது.
மைனாவுக்கு முயலின் பேச்சு வேதனையை தந்தது. நான் சொல்வதெல்லாம் உண்மை தான். இந்த இடம் தான் என்னுடைய இடம். இங்கு பக்கத்தில் உள்ள மற்ற மிருகங்களை வேண்டுமானால் கேட்கலாம் என்று முயலிடம் கூறியது. அதற்கு முயல் உடனே வேண்டாம் வேண்டாம். நான் யாரிடமும் கேட்கத் தயாராக இல்லை. இந்த இடம் என்னுடைய இடம் தான் என்று அழுத்தம் திருத்தமாக கூறியது. மைனாவுக்கு அழுகையே வந்து விடும் போல் ஆகிவிட்டது.
மைனா முயலைப் பார்த்து சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். நாம் யாராவது பெரியவர்களிடம் போய் கேட்போம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை கேட்டு நடப்போம் என்று கூறியது. முயல் அதற்கு அரைகுறை மனதுடன் சம்மதம் தெரிவித்தது பின் இரண்டும் சேர்ந்து ஒரு பூனை இருப்பதைக் கண்டன. அதை கண்டதும் முயல் பயந்தது. ஆனால் மைனா பயப்படாமல் நாம் பூனையிடமே நியாயம் கேட்கலாம். நமக்கு எதற்கு பயம்? நியாயத்தை நாம் யாரிடம் கேட்டால் என்ன? என்றது.
அதற்கு முயல் நமது விரோதிகளிடம நியாயம் கேட்பது? அது நமது உயிருக்கு ஆபத்து ஆயிற்றே என்று கூறியது. அதற்குள் பூனை இவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து விட்டது. இரண்டும் பயந்து போய் பின் வாங்கின.
பூனையின் தந்திரம்
பூனை அவர்களைப் பார்த்து நண்பர்களே, என்னை கண்டு ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? நான் இப்பொழுது விரதத்தில் இருக்கிறேன். அதனால் எந்த விலங்குகளையும் நான் கொல்வதில்லை. நீங்கள் தைரியமாக என் அருகில் வரலாம். உங்களுக்குள் என்ன பிரச்சனை? என்னிடம் கூறுங்கள். என்று கூறியது.
உடனே மைனா நடந்ததை எல்லாம் கூறியது. முயலும் நடுநடுவே தன்னுடைய வாதத்தை கூறியது. இவ்வாறு இரண்டும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தன. இதை கண்ட பூனை அமைதி அமைதி. நீங்கள் இருவரும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் இருவரும் நியாயம் கேட்க தயங்காதீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். ஒவ்வொருவராக என் காதருகே வந்து உங்கள் பக்க நியாயத்தை கூறுங்கள். வீணாகச் சண்டை வேண்டாம் என்று கூறியது.
மைனாவும் முயலும் அழிந்தன.
இதைக் கேட்டு மைனாவும் முயலும் என்ன ஏது என்று யோசிக்காமல் முயலின் காதருகே சென்று பேசத் தொடங்கும் முன்பே இரண்டையும் பிடித்து அழித்திக் கொன்றது. மைனாவும் முயலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காததால் இரண்டும் அழிந்தன.
கதையின் நீதி
விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போவது இல்லை.
இந்தக் கதையில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை நமக்கு இருந்தால் நம்முடைய வாழ்வு செழிப்பாகும். மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள். விட்டுக்கொடுப்பதால் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறோம். விட்டுக்கொடுப்பதன்மூலம் நாம் எதிரிகளை எளிதில் (அன்பால்) வெல்லலாம்.
No comments:
Post a Comment