இரசனையே இல்லாத இராஜா மற்றும் இரசனையுள்ள இரண்டு இராணிமார்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 28, 2020

இரசனையே இல்லாத இராஜா மற்றும் இரசனையுள்ள இரண்டு இராணிமார்கள்

இரசனையே இல்லாத இராஜா மற்றும் இரசனையுள்ள இரண்டு இராணிமார்கள்

அந்த அரசருக்கு சங்கீத ரசனை இல்லை.  ஆனால் அவரின் ராணிகள் இருவருக்கும் சங்கீதம் என்றால் உயிர்.  

தேசமெங்கும் ஜெயக்கொடி நாட்டிவந்த இசைவாணர் ஒருவர் இந்த அரசனுடைய நாட்டுக்கு வந்தார்.  சம்பிரதாயப்படி ராஜசபையில் அந்த வித்துவான் வந்து பாடினார்.  சபையில் இருந்தவர்கள் எல்லாரும் ஆஹா.  பலே என்று வாயார பாராட்டியும் ரசித்துத் தலையாட்டிக் இசை வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர்.  

ஆனால் அரசன் மட்டும் பலே பேஷ் என்று பாராட்டவும் இல்லை.  ரசித்து தலையாட்டவும் இல்லை.  ஆடாமல் அசையாமல் பதுமை போல் உட்கார்ந்திருந்தான்.  

இசைவாணருக்கு பெருத்த ஏமாற்றம்.  அவரது முகம் வாடியது.  மாடங்களில் இருந்தபடி இசை கேட்டு ரசித்த ராணிகளுக்கு ராஜா இப்படி நடந்துகொண்டது குறித்து மிகவும் வருத்தம்.  இசை மேதையை அவமதித்ததற்கு ஒப்பானது இது என்று கருதினார்கள்.  

இசையை ரசிக்க வில்லையே தவிர மன்னர் சம்பிரதாயப்படி இசைவாணருக்கு பரிசு அளிக்கத் தவறவில்லை.  

மறுநாள் அந்தப்புரத்திற்கு வந்த அரசரைத் இரண்டு பேரும் பிடி,  பிடி என்று பிடித்துக்கொண்டனர்.  இசைவாணரின் பாட்டை கேட்டு தலையை அசைக்காதது ஏன் என்று கடிந்து கொண்டனர்.  

அதுசரி,  மற்றவர்களுக்கு சங்கீதம் நன்று தெரிந்து இருக்கிறது.  அதனால் எப்போது பலே  என்று சொல்ல வேண்டும்,  எந்த இடத்திலே தலை அசைக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.  எனக்கு தெரியாதே என்றார் மன்னர்.

இசைவாணர் ஊரை விட்டு கிளம்பும் முன்னர் அவரை நிறுத்தி மறுநாளும் ராஜ சபையில் அவர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். 

ராஜாவின் காதுகளுள் ஒன்றை கயிற்றால் கட்டி அதன் முனையை ராணி ஒருத்தி பிடித்துக் கொள்வாள்.  மற்றொரு காதில் கயிற்றை கட்டி அதன் முனையை இன்னொரு ராணி பிடித்துக் கொள்வாள். 

ஏன் இப்படி ஒரு ஏற்பாடு?  எப்போது பலே சொல்ல வேண்டுமோ அப்போது கயிற்றை அந்த ராணி இழுப்பாள்.  உடனே அரசன் பலே என்று பாராட்ட வேண்டும்.  எப்போது தலையை அசைக்க வேண்டுமோ அப்போது இடக்காலின் கயிற்றை மற்றொரு ராணி இழுப்பாள் உடனே அரசன் தலையாட்ட வேண்டும். இதுதான் ஏற்பாடு.  

மறுநாள்-

 கேட்டுக்கொண்டதற்கு இணங்க இசை விருந்து அளிக்க இசைவாணர் சபைக்கு வந்தார்.  

அரியாசனத்தில் அரசர்......

சபையினர் பார்வையில் படாதபடி பின்னால் ஒரு அறையில் இராணிகள். ஒவ்வொருத்தி கையிலும் ராஜா கதை கட்டி இருந்த கயிறுகள். 

இசைவாணர் பாடத் தொடங்கினார்.  முடிவாகியிருந்தபடி இருவரும் தக்க சமயங்களில் தன் கையில் இருந்த கயிற்றை சுண்டி இழுத்தனர். 

தாத்பரியத்தை புரிந்துகொண்டு மன்னனும் பலே என்று பாராட்டியும், தலையசைத்துலுமாக  இசையை ரசித்தான்.  

முதல் நாள் மன்னருக்கு மனநிலை சரியில்லையோ? என்னவோ? அதனால் தான் ரசிக்க வில்லை போலும் என்று எண்ணிக்கொண்ட இசைவாணருக்கு மனதுக்கு உற்சாகம் பிறந்தது. 

மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை... 

எப்போதையும்விட பிரமாதமாய் பாடினார்.  உள்ளே இருந்து கயிறு இழுத்துக் கொண்டிருந்த ராணிகள் உண்மையிலேயே ரசிகர்கள் அல்லவா?  இசைவானர் ராஜசபையில் அற்புத சஞ்சாரம் செய்த போது ராணிகளும் ஆலாபனையில் மெய்மறந்து கயிறுகளை அவ்வப்போது இழுத்து விட்டார்கள்.  அதனால் கயிறு அறுந்து விட்டன.  

''பாட்டை நிறுத்தவும்''

 திடீரென்று அரசர் உரக்கக் கட்டளையிட்டார்.  இசைவாணருக்கு ஒன்றும் புரியவில்லை.  பாடியதில் தான் ஏதாவது பிழை நேர்ந்து விட்டதோ என்று மனம் குழம்பினார் இசைவாணர்.  

இசைவாணரே,  என் காதுகளில் கட்டியிருந்த கயிறு அறுந்து விட்டது.  பழையபடி கட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்.  அப்போதுதான் உங்கள் பாட்டை கேட்டு,  எந்த இடத்தில சிரிப்பது எப்போது பலே பலே பேஷ் என்று சொல்வது என்பது எனக்கு புரியும் என்று கூறியவாறு மன்னன் எழுந்து உள்ளே போனார்.

இரசக்கயிறு பற்றி அறியாத சபையினர் ஏதும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment