நம்பிக்கை - தமிழ் சிறுகதை
நம் பாரத நாட்டில் பல மொழி பேசுபவர்கள் உண்டு. வேறுபட்ட உணவு பழக்கவழக்கங்கள் உள்ளவர் உண்டு. ஆனால் நமது ஒருமைப்பாட்டு உணர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பது நமது அறிவு தான்.
நமது நாட்டின் கோயில்களும் அதன் வரலாறுகளும் நம் மனதை தூய்மை படுத்துகின்றன. எண்ணங்களை சீர் படுத்துகின்றன. பழமையானதும் புனிதமானது மான பல ஊர்கள் நம் நாட்டில் உள்ளன ஒவ்வொன்றுக்கும் பல பெருமைகளும் சிறப்புகளும் உள்ளன.
வடநாட்டில் கங்கை நதியின் கரையில் அமைந்துள்ளது. காசி நகரம் இது இன்று வாரநாசி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்கு போக வேண்டும். கங்கையில் நீராட வேண்டும் என்று நினைப்பார்கள். இந்திய மக்களின் லட்சிய பயணம் ஆகியிருப்பது காசி பயணம் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
திடவிரதன் என்பவன் நல்ல மனம் உடையவன். சில சமயம் அவன் பேசுவதை எல்லாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவன் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய அவன் ஒருபோதும் தயங்க மாட்டான். யார் தடுத்தாலும் நிற்க மாட்டான். அவன் பேசுவதை கேட்கும் போது சில சமயம் பக்திமான் பேசுவது போல இருக்கும். மற்றொரு சமயம் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் பேசுவதுபோல் பேசுவான். ஆனால் உள்ளத்தால் இறைவனை அனுதினமும் எண்ணி நற்காரியங்களை செய்து வந்தான்.
காசியில் கும்பமேளா விழா தொடங்கியது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வேத பண்டிதர்கள் பலரும் கூடியிருந்தனர். காசி நகரமே ஒரு தனிப் பெருமையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
ஒருநாள் திடவிரதன் நண்பனுடன் கங்கையில் நீராட வந்தான்.
கங்கையில் நீராட பல துறைகள் உண்டு விரதம் அன்று வழக்கமாக தான் நீராடும் படித்துறையை விட்டு மற்றொரு படித்துறைக்கு சென்றான். நண்பர்கள் இருவரும் சுற்றுப்புறத்தையும் மறந்து ஏதேதோ பேசிக் கொண்டு வந்தனர்.
"லொக்" "லொக்" என்று பயங்கரமான ஒரு இருமல் சத்தம் தொடர்ந்து கேட்டதும் அவன் நண்பனும் பேச்சை நிறுத்திவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தனர். அங்கே தள்ளாத வயதில் ஒரு கிழவர் கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தார். உடல் மெலிந்து போய் மேனி சருகு போல காணப்பட்டது. கிழிந்த ஆடையை அணிந்திருந்தார். பல நாள் உணவு இன்றி பசி தீர்ந்தது போல அவர் கண்களும் ஒளியிழந்து காணப்பட்டது. இடைவேளை இன்றி வந்த இருமலை அடக்கிக் கொள்ள முடியவில்லை. உயிரையே விட்டு விடுவார் போலிருந்தது.
அவர் அருகே ஒரு இளம் பெண் தலைவிரி கோலமாய் அழுதவண்ணம் நின்றிருந்தாள். வருபவர்களை எல்லாம் பார்த்து "ஐயா எங்களுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நதியில் நீராட வரும் மக்கள் இவளையும் அந்த கிழவரையும் பார்த்துவிட்டு பேசாமல் சென்று கொண்டிருந்தனர். சிலர் அவளது அழகை கண்டு பிரமித்துப் போய் நின்றனர்.
இந்த வியாதிக்கார கிழவர் இந்த அழகான பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு இருக்கிறார். என்ன அநியாயம். பாவம் இந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு அவலம். புத்தி கெட்ட பெண். நோயாளி புருஷனை இங்கு எதற்கு கூட்டிக் கொண்டுவந்தாள். காடு வா வாங்குது. வீடு போ போங்குது. இந்த நிலையில் கிழவனுக்கு இப்படி ஒரு பெண்டாட்டியா? இவ்விதம் தங்களுக்குள் எல்லாரும் பேசிக் கொண்டு சென்றார்களே தவிர எவரும் வந்து அவளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
திடவிரதன் கிழவர் படுத்திருந்த இடத்திற்கு அருகே வந்தான். மக்களுடைய மனப்போக்கையும் அவர்கள் பேசிக்கொண்டு சென்றதையும் பார்த்தான்.
இதன் அருகே வந்து நிற்பதை கண்டதும் அந்த இளம்பெண் ஐயா நீங்களாவது உதவி செய்யக்கூடாதா என்று கேட்டால் உடனே திடவிரதன் நான் போய் வைத்தியரை அழைத்து வரட்டுமா என்றான்.
அதற்கு அவள் "ஐயா என் கணவர் ஒரு விரதத்தைப் பின்பற்றி வருகிறார். இன்று கும்பமேளா விசேஷ தினம் அல்லவா? இம்மாதிரி புனிதமான நாட்களில் அவர் மருந்து எதுவும் உட்கொள்ள மாட்டார். வைத்தியர் வந்து தனக்கு மருந்து தரும் சாப்பிடமாட்டார். நான் என்ன செய்வேன்? நீங்களே ஒரு வழி சொல்லுங்கள் என்றாள்.
இளம் பெண்மணி பேசியதை கேட்டதும் திடவிரதன் திடுக்குற்றான். மருந்து சாப்பிட மாட்டார் என்றால் எப்படி இவரை காப்பாற்றுவது என்று கலங்கினான். பெண்ணின் நிலையை பார்த்தால் பரிதாபமாக இருந்தது. அவரின் கொள்கை நினைத்தாலும் வியப்பாக இருந்தது. அம்மா உங்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை சொல்லி விடுங்கள் அந்த விதத்தில் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். எனக்கு கடவுளுடைய கருணையில் நம்பிக்கை இருக்கிறது. அந்த அளவுக்கு என்னால் இயன்றதை நான் நிச்சயம் செய்கிறேன் என்றான்.
ஐயா உங்களில் யார் பாவமும் செய்யாதவரோ அவர் சென்று கங்கையில் புனித நீரை எடுத்து வந்து அவருக்கு கொடுங்கள். அதனால் அவருக்கு இந்த நோய் தீரலாம் என்று எனக்கு தோன்றுகிறது என்றாள். அதை கேட்டதும் நண்பனும் கூடி இருந்த மற்றவர்களும் பதில் சொல்ல முடியாது மௌனமாய் நின்றனர்.
ஆனால்,
திடவிரதன் முகத்தில் ஒரு ஒளி தோன்றியது. அம்மா நீங்கள் கூறியது போலவே நான் சென்று புனித கங்கையின் நீர் எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக படிகளில் இறங்க ஆரம்பித்தான். எல்லாரும் அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். கங்கையில் நீராடிவிட்டு சிறிய பாத்திரத்தில் நீரை ஏந்திய வண்ணம் திடவிரதன் கிழவரை நோக்கி வேகமாக ஓடி வந்தான்.
அம்மா, இன்று கும்பமேளா விசேஷ தினம். கங்கையில் நீராடிய உடனே செய்த பாவம் எல்லாம் போய்விடும் என்பது சத்திய வாக்கு அல்லவா. அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. ஆகையால் இப்போது நீராடியவுடன் என் பாவங்கள் அனைத்தும் நீங்கி விட்டன. இப்போது இந்த நீரை உங்கள் கணவருக்கு புகட்டுகிறேன் என்று கூறினான்.
கிழவரின் தலையை மடிமீது வைத்துக் கொண்டு எடுத்து வந்த நீரை மெல்ல மெல்ல வாயில் ஊற்றினான். எந்த நேரத்தில் உயிரை விட்டு விடுவாரோ என்று இருந்த கணவர் கங்கைநீர் வயிற்றுக்குள் சென்றதும் அமிர்தம் போல துள்ளி எழுந்து உட்கார்ந்தார்.
கூடியிருந்த அனைவரும் வியந்து போயினர். கிழ உருவில் இருந்த அவர் தேவனாக வெளிப்பட்டார். அவருக்கு மனைவியாக இருந்த பெண் தேவதையாக உருமாறினாள். திடவிரதன் செய்வதறியாது திகைத்து நின்றான். தேவன் வடிவினன் திடவிரதனைப் பார்த்து உனது நம்பிக்கை போற்றப்பட வேண்டிய ஒன்று. குருவினுடைய உபதேசம், புனித நதிகளின் மகிமை, மகான்களின் தரிசனம், மந்திரங்களின் சக்தி, மருந்துகளின் குணம் இவற்றில் எந்த அளவுக்கு உனக்கு நம்பிக்கை இருக்கிறதோ அதே அளவுக்கு அவையும் நிச்சயம் நன்மை செய்யும். பலனைத்தரும் என்று கூறி இருவரும் தவிர திடவிரதனை ஆசிர்வதித்து மறைந்தனர்.
No comments:
Post a Comment