Tamil moral story for children மாணவர்களுக்கான தமிழ் சிறுகதை | பொய் சொல்லக் கூடாது Do not say lie
பொய் சொல்லக் கூடாது Do not say lie
"நேற்று கடைசி பாட கால அளவில் நீ வகுப்பில் இல்ல" ஆசிரியர் கேட்டது வினோத்குமார் சுறுசுறுப்பானான்.
ஆமா சார்...
ஏன் என்னாச்சு? இது என்ன புது பழக்கம்? வகுப்பை கட் அடிக்கிற...
வரவர கெட்ட சகவாசம் அதிகமாயிட்டது..
"இல்ல சார்"
"என்ன"?
"நேத்து"
"நேத்து" - ?
எங்க அம்மாவுக்கு கால் எலும்பு முறிஞ்சு போச்சு
என்னது?
ஆமா சார். எனக்காக சாயந்தரம் கேசரி பண்ண பரண் மேல இருக்கிற ரவா டப்பாவை எடுக்க ஸ்டூல் போட்டு முயற்சி பண்ணியிருக்காங்க.
அப்போ எப்படியோ பேலன்ஸ் தவறி எங்க அம்மா கீழே விழுந்து கால் எலும்பு முறிந்து ஹாஸ்பிடல்ல போயி கட்டுப்போட்டு பிரச்சனை ஆயிடுச்சு.
"ஐயோ"
அப்புறம்? ஆசிரியர் தொனி மாரி வினவினார்.
தகவல் வரவே உங்ககிட்ட சொல்லாமலே கிளம்பிட்டேன்.
"சரி உட்கார்" ஆசிரியர் சுருதி குறைந்து சம நிலைக்கு வந்தார்.
வினோத்குமார் இருக்கையில் அமர்ந்து கொண்டு பக்கத்திலிருந்த நண்பர்களைப் பார்த்து கண் சிமிட்டினான்.
டேய் பலே கெட்டிக் காரன் டா நீ
என்னம்மா புழுகி சமாளிச்சுட்ட
நிஜமா நடந்திருந்தால் கூட இப்படி பேசி இருக்க முடியாது.
அவ்ளோ எதார்த்தமா டயலாக் பேசினடா?
இத அப்படியே மெயின்டன் பண்ணு. ஜாலியா இருக்கலாம்.
வினோத்... "கட் அடிச்சிட்டு சுத்திர சுகம் வேற நேரத்தில கிடைக்காததுடா"
அவனது நண்பர்கள் ஒவ்வொருவராக அவனது தகாத செயலை நியாயப்படுத்த அங்கீகரித்தனர்.
தேன் குடித்த வண்டானான் வினோத் குமார்.
பிற்பகல் 3 மணியிருக்கும். வினோத் வீட்டில் இருந்து தகவல்.
"வினோத் உங்க அம்மா ஆஸ்பிடல்ல...."
ஐயோ என்ன ஆச்சி?
என் அம்மாவுக்கு? பதறி போனான்.
அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனையில்.
ஆனால் அவள் படுக்கையில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தாள்.
காலில் பெரிய கட்டு. உடலில் குளுகோஸ் ஏற்றிக் கொண்டிருந்தது. அம்மா அலறிக் கொண்டே அருகில் சென்றான்.
அவன் அம்மாவால் பேச முடியவில்லை. பார்க்க முடிந்தது.
என்னம்மா ஆச்சு?
வினோத் கவலைப்படாதடா
பரண்மேல் இருக்கிற டப்பாவை எடுக்கிறபடபோ பேலன்ஸ் தவறி விழுந்து கால் எலும்பு உடைந்து இருக்கு. கட்டுப் போட்டு இருக்காங்க. அதுல அம்மாவுக்கு சீக்கிரம் குணம் கிடைச்சுடும். அவன் அக்கா ரமா அழுதவாறு விவரித்தாள்.
மண்டையில் யாரோ அடிப்பதாக பட்டது வினோத்குமாருக்கு.
காலையில்....
தான் சொன்ன சொல்....
மாலையில் நிஜமாகி...
ஐயோ தப்பு பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன். தனக்குள்ளே கத்திக்க்கொண்டு அழுதான்.
வெளியில் சொல்ல முடியாத நிலை
ஆசிரியரிடம் கெட்டிக்காரத்தனமாக புளுகியதாக நினைத்த நினப்பு இப்போது அவனுள் குமட்டியது.
அபாண்டமாக பொய் பேசுவதில்லை. என்கிற இயல்பான சிந்தனைக்கு மீண்டு கொண்டிருந்தான் அவன்.
கதையின் நீதி
தமிழில் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்.
வினோத்தைப் பொறுத்தவரை அவன் பொய்யாக சொன்ன வார்த்தை அவன் மனதைக் கொன்றது. இனி பொய் பேசுவதில்லை என்கிற நிபந்தனையோடு தப்பித்தான்.
No comments:
Post a Comment