மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை - தமிழ்ப்பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, October 26, 2020

மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை - தமிழ்ப்பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும்

தமிழ்ப்பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும்

1. மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை

மெய்க்கும் பொய்க்கும் மிக முக்கியமான வித்தியாசம் என்ன?  பொய் சொன்னால் உடனடி பலன் கிடைக்கிறது. மெய் சொன்னால் பலன் ஏற்பட கொஞ்சம் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்காக பொய் சொல்லியே வாழ்ந்து விடலாம் என்று மட்டும் கனவு கண்டு விட வேண்டாம். 

ஏனென்றால் பொய் சொல்லி வாழும் வாழ்க்கை பகற் கனவு.  பலிக்காமல் போய்விடும் என்பது மட்டுமல்ல அது நிலைக்கவும் செய்யாது. மணற்கோட்டை போல ஒரு பொய் சொன்னால் இன்னொரு பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படி பொய் கூறுவது சங்கிலித் தொடராக விட மெய் சொல்லவேண்டிய சந்தர்ப்பமே இல்லாமல் போய்விடுகிறது.

மெய் சொல்லி வாழ்ந்தால் எதற்கும் மனம் கலங்க வேண்டியதில்லை. பின்னால் என்ன ஆகுமோ என்று மனசுக்குள் குறுகுறுக்க வேண்டியது இல்லை. மனசாட்சிக்கு பயப்படவும் வேண்டியது இல்லை. பொய் சொல்லி வாழ்கிறவனால் ஆனால் இப்படியெல்லாம் வாழ முடியுமா என்று கேட்டால் அது ஒருபோதும் முடிவதில்லை. 

பொய் சொல்லி உடனடியாக சொத்து சேர்த்து கொள்ளலாம். அல்லது நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த குட்டு வெளிப்பட்டு விடும் போது தூக்கு போட்டு தொங்க வேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு அவமானத்தில் துடிக்க நேரிடும். அதனால் வீடு கட்டினால் சின்னதாக இருப்பினும் மெய் என்னும் வீட்டைக் கட்டுங்கள். பெரியதாக இருக்க வேண்டும் என்று பொய் விடு கட்டினால் அது தரை மட்டமாகி விடும்.

2. மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்

எதையும் அனுபவித்து செய்ய வேண்டும். அப்போதுதான் அதற்கான பலன் கிடைக்கும்.  உழைப்பு என்பது கூட இதற்கு விதி விலக்கு அல்ல. காரணம் எதிலும் ஒரு ஈடுபாடு கொண்டு செயலில் இறங்கினால்தான் அதற்கான பலனை ஆழமானதாக எப்படி எதிர்பார்க்கிறோமோ அப்படி அமையும். 

ஏனோதானோ என்று வேலையை செய்யும் போது பிறரை ஏமாற்றுவது மட்டுமல்லாமல் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும் செய்கிறோம். எப்படி நமக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலையை நாம் செய்ய முனையும் போது அது நமக்கு சுவாரசியமாக இருக்கும். வேலையில் மனம் லயிக்காது.  இத்தகைய சந்தர்ப்பங்களில் வேலை செய்யாமலேயே இருந்துவிட முடியாது. காரணம் கடமை என்று ஒன்று இருக்கிறது இல்லையா அதனால் பிறர் பார்வையில் நாம் வேலை செய்ய பொருளாகத்தான் காணப்படுகிறோம். 

அதாவது பார்க்கும் போது மட்டுமே வேலை செய்கிறோம். அந்த வகையில் அவர்களை ஏமாற்றுகிறோம். இப்படி அரைகுறையாக வேலை செய்வதால் வேலை பூர்த்தி பெறாததால் அதற்கான பலன் முழுமையாக கிடைக்காமல் போகிறது. இந்த வகையில் நாம் ஏமாறுகிறோம். ஆக எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்கிற வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டால்தான் எதிர்பார்க்கிற வெற்றிக்கனியை பறிக்க முடியும். 

சுருக்கமாகக் கூறினால் பரீட்சைக்காக மேலுக்கு புத்தகங்களில் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து,  ஆழமாக படிக்காமல் பரிட்சை எழுதி தோல்வி அடைந்து விடுகின்ற மாணவனாக நாம் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனம் தேவை.

3. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல 

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.  இதிலிருந்தே தெரியவில்லையா எதிலும் ஒரு பொருத்தமாக வேண்டும் என்று. செருப்பு எங்கே வைக்க வேண்டுமா அங்கே வைத்தால்தான் அழகு. பொருத்தமானதும் கூட.  

செருப்பை பூஜை அறையில் வைத்தால் பொருத்தமாகவா இருக்க போகிறது? பொருத்தமாக இருக்காது என்பதோடு அசிங்கமாகவும் இருக்கும் என்பதல்லவா உண்மை?  ஆக,  எந்த ஒரு செயலிலும் ஏன் கூற்றிலும் கூட பொருத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருங்கள். 

திருமண விஷயத்தில் கூட ஒரு பொருத்தம் இருப்பது அவசியமே. ஜாடிக்கு ஏற்ற மூடி போல அவரவர் அந்தஸ்துக்கு ஏற்ற வகையில்தான் திருமணங்கள் செய்யப்படவேண்டும்.  அந்தஸ்து மாறிவிடும் போது பின்னால் அது பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும் என்பதைக் கூறவே தேவையில்லை. 

பணக்காரன் ஒருவன் ஒரு ஏழைப் பெண்ணை மணந்து கொண்டு பின்னால் அவளை ஏழை என்று சாடினால் அது அழகாகவா இருக்கும்?  இதனால் திருமணத்தில் கூட விரலுக்கு ஏற்ற மோதிரமாக பாருங்கள்.  செயலில் மட்டும் இன்றி கூற்றிலும் கூட பொருத்தம் காணப்பட வேண்டும். பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக இல்லாததையும் பொல்லாததையும் கூறினால் வம்பாகிப்போய்விடும். பிறர் விரும்பும் படி பேச வேண்டும் என்றாலும் உண்மையை மட்டும் பேசுங்கள்.  கூறுங்கள்.  அதை உங்கள் பாணியில் கூறுங்கள் . நீங்கள் பிறரால் கவலப்படப் போவது நிஜம்.

No comments:

Post a Comment