தமிழ் பழமொழிகளுக்கு மிகச்சரியான விளக்கங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம் | Let us look in detail at the most accurate interpretations of Tamil proverbs
1. சோறு சிந்தினால் பொறுக்கலாம் மானம் சிந்தினால் பொறுக்க முடியுமா?
நாம் ஒரு சாண் வயிற்றுக்காக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மை எனினும் அதற்கு மேலாக நாம் மானத்துக்காக வாழ்கிறோம் என்பதுதான் உண்மையிலும் உண்மை. மானம் பெரியது என்பதால் தான் நாம் உழைத்து சம்பாதித்து சாப்பிட்டு பிழைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை என்றால் பிறரிடம் கையேந்தி பிச்சைக்காரர்களை விட மோசமாக உலா வந்து கொண்டிருப்போம்.
மானம் பெரிது, அந்த மானத்தைக் காப்பது சிறப்பு. மானம் ஒரு முறை அடி பட்டால் அது என்றைக்குமே முறிந்து விட்ட கிளை தான். அதை ஒட்ட வைக்க முடியாது. மானம் போகாமல் வாழ்வதே பெரிது.
2. டெல்லிக்கு ராஜா என்றாலும் தாய்க்கு பிள்ளை தானே
தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தாயின் உருவத்தில் தெய்வத்தைக் காணலாம். ஏனென்றால் தாயிற் சிறந்த கோவில் இந்த உலகில் எதுவும் கிடையாது. கஷ்டப்பட்டு பிள்ளையை கவனித்தவள் தாய். அதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் தன் உயிர் இருக்கும் வரை குழந்தையை பாரபட்சமற்ற பாசத்துடன் வளர்த்து அவன் வளர்ச்சியிலும், மனதிலும், விளையாட்டிலும், திறமையிலும், அறிவியலும் என்று அனைத்திலும் பெருமிதம் கொண்டு மகிழ்ந்து வாழ்க்கைக்கு வழி நடத்திக் காட்டுகிறாள். எவ்வளவு உயர்ந்த மனிதன் என்றாலும் அவன் தனது தாயை மறவாமல் அவளை பேணிக்காத்து அவளை மகிழ்விப்பதையே பேறாக எண்ண வேண்டும்.
3. தன் வாயால் கெடும் தவளை
தவளையும் மனிதனும் கெடுவது தங்கள் வாயால் தான். தவளை ஓயாமல் கத்தி தனது இருப்பிடத்தை தெரிவித்து பாம்புக்கு பலி ஆகி விடுவதை போல மனிதனும் தன் நாக்கை வேண்டாத வார்த்தைகளுக்காக சூழல விட்டு அனைவரையும் பகைத்து கொள்கிறான். பகை கொண்ட வாழ்க்கை புகை கண்ணாடி போல இருட்டாக இருக்கும். கலகலப்பாக பேசுகிறேன். தமாஸாக பேசுகிறேன் என்று சம்பந்தமில்லாத ஒரு கதையை பேசிக்கொண்டிருந்தால் வம்பை காசு கொடுத்து வாங்கிய கதையாகி விடும். எதை எதையோ பயிற்சி செய்யும் மனிதன். நாக்கை அடக்க பயிற்சி செய்தால் நல்லது.
4.தாய் தவிர சகலமும் வாங்கலாம்
உண்மையைக் கூறினால் கவுரவத்தையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். இந்த உலகில் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே ஒரு பொருள் தாய். அவளின் அன்பு, தாய் அன்புக்கு மட்டுமே அடிமை. பாசத்துக்கு மட்டுமே அடிமை.
பணத்துக்கு வளைந்து கோல் அல்ல. அவள் பணம் இருந்தும் தாயின் அன்பை பெற முடியவில்லையே என்று நித்தம் நித்தம் எண்ணி துடித்துக்கொண்டிருக்கும். தாய் இல்லாத மனித நெஞ்சங்கள் எத்தனையோ கோடி. ஆடாத கட்டிடமும் ஆட்டம் காணலாம். ஓடுகிற காலம் உறைந்து போகலாம். ஆனால் தாயின் பாசம் மட்டும் என்றென்றுமே கீழே விழுந்து விடாத நீலமேகம் தான். அந்த நீல மேகத்தில் பணம் ஆசை பாரபட்சமும் வெறுப்பு போன்ற பேயாட்டங்களுக்கு இடமில்லை என்பதுதான் உலக சிறப்பு.
5. திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்
எதுவுமே நம்முடைய எண்ணங்கள் படி தான் நம் செயல்கள் படிதான் நிகழ்ந்து வருகின்றன. மனசிலே கெட்ட எண்ணங்கள் இருந்தால் பிறர் மனசும் நமக்கு கெட்டவையா தான் தோன்றும். வேண்டாத செயல்களை ஒருவன் செய்யும் போது அவனுக்கு எதிராகவே அனைத்தும் நிகழ ஆரம்பிக்கும். ஒருவனை நீ என்று அழைத்தால், அவனும் நீ என்றுதான் கூறுவானே தவிர நீங்கள் என்று கூற மாட்டான். உண்மையை கூறினால் உண்மை கிடைக்கும். நல்லது செய்தால் நல்லவை கிடைக்கும். நெல் விதைத்து விட்டு கோதுமை பயிர் ஆக வேண்டும் என்பது வடிகட்டிய முட்டாள்தனம் தானே?
6. தீராக் கோபம் போராய் முடியும்
எதிலும் ஒரு காரணம் இருக்கும் என்பது அதற்கும் ஒரு நியாயம் இருக்கும் என்பதால் கோபம் கொள்வதிலும் நியாயம் இருக்க வேண்டும். மகன் படிக்கவில்லையே என்று அப்பா கோபம் கொள்ளலாம். கோபத்துக்கு பிறகு தாபமும் இருக்க வேண்டும். கோபம் என்பது அதிகபட்சமாக தீக்குச்சியின் உஷ்ணத்தோடு இருக்கலாம். அது எரிந்து கொண்டே இருக்கும் எரிமலையாக இருக்கக்கூடாது. சுருக்கமாக கூறினால் கோபக்காரன் என்கிற பெயரே கூடாது. கோபமும் தாபமும் சேர்ந்து இருக்கும் போது தான் அவர் நல்லதுக்குதான் கோபப்படுகிறார் என்ற எண்ணம் வரும் பிறருக்கு. அத்துடன் கோபத்துக்கான பலனும் கிட்டும்.
அப்படி இல்லாமல் தீரா கோபத்துடன் இருந்தால் அவர் எப்போதும் அப்படிதான் என்று கோபத்தை அசட்டை செய்ய மாட்டார்கள். கடைசியாக கோபத்தால் இரத்தக் கொதிப்போடு போராட வேண்டியது தான்.
7. துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு
வாழ்க்கையின் துணை எது என்றால் அது துணிவு தான். எதையும் துணிந்து செய்யும் போது தான் மனிதனாக பிறந்ததன் பலனை பெற முடியும். இதை செய்யலாமா? அதை செய்தால் தோல்வி ஏற்பட்டால் என்று சந்தேகத்தை மனதுக்குள் வாங்கிக் கொள்ளக் கூடாது. தோல்வியா வெற்றியா என்று துணிந்து செய்யும் போது தானே தெரியவரும்.
பள்ளிக்கூட பரீட்சையில் ஒரு மாணவன் வெற்றி பெறுவது அவன் அறிவில் மட்டுமில்லை அந்தப் பரீட்சை எதிர்கொள்ளும்போது இருக்கும் துணிச்சலில் தான் இருக்கிறது. இதுவே வாழ்க்கைக்கும் கூட.
8.தூரத்து தண்ணீர் ஆபத்துக்கு உதவாது
உயிர் போகிற அளவுக்கு தாகம் எடுக்கிறது நமக்கு. ஆனால் தாகம் தீர்க்கும் தண்ணீர் நம் கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது. இப்படி தண்ணீர் இருந்தும் நம் தேவை தீர்க்காமலேயே போய்விடுகிறது.
இது நம் உறவுக்கும் நட்புக்கும் சிநேகிதத்துக்கும் என்று அனைத்துக்கும் பொருத்தமானது. உடல் குன்றிப் போய் அவதிப் பட்டுக்கொண்டிருக்கிறோம். நம்மைப் டாக்டரிடம் அழைத்துச் செல்ல எவரும் இல்லை. இந்த நேரத்தில்தான் ஐயோ நமக்கு என்று எவரும் இல்லையே? என்று வருந்துகிறோம். இதனால் நமது உறவினர்களை, நண்பர்களை தூரம் வைக்காமல், பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஜனபலம் மனபலம்.
No comments:
Post a Comment