1. பிஞ்சிலே பழுத்தவன் போல
காயாக இருக்க வேண்டியது காயாக இருக்க வேண்டும். பூவாக இருக்கவேண்டியது பூவாக இருக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பு. காயாக இருப்பது பழம் ஆகிவிட்டாலோ இரண்டுக்கும் என்ன மதிப்பு? இப்படித்தான் குழந்தைகள் குழந்தைகளாக நடந்துகொள்ளவேண்டும்.
அவர்களின் பேச்சில் பெரிய தனம் இருக்க அனுமதிக்க கூடாது. ஐயா, அக்கா என்று மழலை மொழியில் குதித்து விளையாட வேண்டிய குழந்தை "போடி" என்று பேசுவதை கேட்க காதுக்கு இனிமையாக இருக்கும். குழந்தைகளின் பேச்சில் மட்டுமல்ல நடத்தையிலும் பெரிய தனம் தலை காட்டக் கூடாது. "சுருக்கமாக பிஞ்சிலே பழுத்தது" என்று பெயர் வாங்க கூடாது.
2. பீதின புடவை பெருநாள் வராது
கிழிபட்ட துணி மட்டுமல்ல மனசும் கூட நீண்ட நாள் வராது. துணிகள் கிழிந்தால் பாதகமில்லை வேறு வாங்கிக் கொண்டால் போயிற்று. மனசு கிழிபட்டால் வேறு மனசா வாங்க முடியும்? மனசு கிழிபடுவது என்பது என்ன? பிறர் மீது பொறாமை படும் போது நம் மனசு இருக்கிற நிலைக்கு தான் மனசு கிழிபடுவது என்று பெயர். பொறாமைப்படும் போது மனசு மனசு ஆக இருப்பதில்லை. அது காழ்ப்புணர்ச்சியோடு இரை தேடும் பாம்பாக மாறி விடுகிறது. பாம்பு கொத்தினால் அது பெரும் விஷம். இன்னொரு மனிதனின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவன் தனக்குத்தானே விஷம் வைத்துக் கொண்டவன் ஆகிறான்.
3. பூமியைப்போல பொறுமை வேண்டும்
மனிதனுக்குப் பெருமை தருகிற விஷயங்களில் பொறுமைக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒருவர் பிறரிடம் பொறுமைசாலி என்று பெயர் எடுத்துவிட்டால் அவர் தலை சிறந்தவர் என்று ஆகி விடுகிறார். காரணம் பொறுமை இழக்கும்போது நாம் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம்.
உணர்ச்சிவசப்படும் போது உடலும் உள்ளமும் பாதிக்கப்படுகிறது. அதோடு பாதிக்கப்படுவது நம் பெயரும் கூட. எதையும் பொறுமையோடு சாதிக்கலாம் கோபித்து சாதிக்க முடியாது. பொறுமையாக இருக்கும் போது தான் பிறருக்கு நம்மால் மதிப்பும் கருணையும் வரும்.
பொறுமை அன்பின் நீரூற்று. பல இன்னல்களை இடிதாங்கியாய் தாங்கிக்கொள்ளும் பொறுமை காக்கத்தான் பூமி மதிக்கப்படுகிறது மனம் அப்படி இருந்தால்தானே நல்லது?
4. பெருங்காயம் இருந்த இடம் வாசனை போகாது
பெருங்காயம் இருந்த இடம் இப்போது காலியாக இருக்கலாம். ஆனால் அந்த இடம் மட்டும் கம்மென்று வாசம் அடித்துக்கொண்டே இருக்கும். அதுபோல் தான் மனிதனின் இறப்புக்குப் பிறகு என்றென்றும் அவன் பெயர் சொல்லிக் கொண்டிருப்பது அவன் விட்டுச் சென்ற அவனது நற்குணங்களே.
பணக்காரர் ஒருவர் அமரர் ஆகிவிட்டால் அவர் நினைக்கப்படுவது அவரது பணத்தால் அல்ல. தானம் செய்த மனதால். ஆக, நாம் மரணத்திற்குப் பின்னும் நம்மை மற்றவர் நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டுமானால் நாம் நல்லவர்களாக வாழ வேண்டும்.
5. பேராசை பெருநஷ்டம்
திருப்திப்படுத்தப்பட முடியாதவன் மனிதன். அதனால் அவன் அளவுக்கு மீறி ஆசைப் படுகிறான். ஆசைப்படுவதில் தவறில்லை. காரணம் ஆசைப்படாதவர் மனிதனாக இருப்பதில்லை. ஆசை இருப்பதால் தான் வாழ்க்கை இனித்துக் கொண்டு இருக்கிறது.
நம் வாழ்க்கை ஒரு கடல் எனில் மேல் ஆசை என்பது அதன் அலை. கடலின் மட்டத்திற்கு தான் அலை இருக்க வேண்டும். மட்டத்தை தாண்டினால் அது வெள்ளமாக மாறி ஆபத்தை விளைவிக்கும். அதனால் நாம் வசதிக்கு ஏற்ப தான் நமது ஆசைகளை வளர்த்துக் கொண்டு அதை அடையும் முயற்சியில் இறங்க வேண்டும். சுருக்கமாக கூறினால் லாட்டரி சீட்டில் 100 ரூபாய் பரிசாக விழுந்தது என்று இன்னும் அதிக தொகை பெற வேண்டும் என்று சீட்டு வாங்கி பரிசு விழாமல் தோற்றுப் போகிற கதையாக இருக்க கூடாது ஆசைப்படுவது.
No comments:
Post a Comment