1. நேற்றிருந்தார் இன்றில்லை
இன்று நாம் உயிரோடு இருக்கிறோம். நாளை உயிரோடு இருப்போமா என்று உறுதியாக கூற இயலாது. அதனால் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து விட வேண்டும். நாளைக்கு என்று பணத்தை சேமித்து வைக்கவேண்டும் என்பது அவசியம்தான். அதற்காக எதுவும் செலவு செய்யாமல் கஞ்சத்தனமாக வாழ்வது பிறகு எப்போதுதான் சுகத்தை அனுபவிப்பது? மணவாழ்க்கையை ஆயினும் காதலேயாயினும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட்டு அனுபவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பிறந்ததற்கான நல்ல பயனை பெற்றவர்களாவோம் நாம்.
2.நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு
நாம் குற்றவாளியாக இருப்போம். ஆனால் எவராவது ஏமாந்தவர்கள் கிடைப்பார்களா என்று தேடுவோம். பழியை அவர்கள் மீது தூக்கிப் போட இது மனித இயல்பு. காரணம், செய்த குற்றத்தை பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்கிற குணம் தைரியம் யாருக்கும் இல்லை. குற்றத்தை ஒப்புக்கொண்டால் ஊரார் மத்தியில் நம் பெயர் கெட்டுப் போய்விடுகிறது என்னும் கீழ் புத்தி. எவனொருவன் பிறர் கண்களில் கெட்டவனாக தெரிகிறானோ, அவனே ஆகப்பட்டவன். நம் குற்றத்தை அவன் மீது தூக்கிப் போட இப்படி செய்தால் நம் தவறுகள் வெளியே தெரியாமல் போய் விடலாம். ஆனால் மனசாட்சி ஒன்று இருக்கிறதே இதை ஏமாற்ற எவரால் முடியும்?
3. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
பணத்தைக் காட்டிலும் உடல் ஆரோக்கியம் தான் சிறந்தது. எந்த வகையிலும் காரணம், தொலைந்த பணத்தை சுலபமாக மீட்டுவிடலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் கடினமாக உழைத்து நோய்நொடி இல்லாத வாழ்க்கை மகிழ்ச்சியின் உச்சகட்டம். நோயால் பீடிக்கப் படும் போது நம்மிடம் எவ்வளவு வசதிகள் இருப்பினும் அதை அனுபவிக்க இயலாது. நோய் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் கேடு என்பதை உணர்க.
நோயற்ற வாழ்வே வசதிகளைப் பெருக்கிக் கொடுக்கும். அந்த வசதிகளை சுகமாக அனுபவித்து இடம் கொடுக்கும். சுருக்கமாக கூறினால் நோய் இல்லாதவன் தான் மனிதனாக உலாவ முடியும்.
4. பதறிய காரியம் சிதறிப் போகும்
தானத்தில் சிறந்த தானம் நிதானம். பிறர் மெச்சிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பலர் முன்னிலையில் சிலர் ஓடியாடி கஷ்டப்பட்டு வேலை செய்வதாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் காரியங்கள் எதுவும் முழுமை பெறாமல் அரையும் குறையுமாக தான் இருக்கும். ஏனென்றால் எதையும் நிதானம் இல்லாமல் வேகமாக செய்ய முயலும் போது கையும் காலும் ஓடாது என்பதோடு மனசு நம்மோடு ஒத்துழைக்காது. இதனால் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்பதை அறியமுடியாத பதட்ட நிலை உருவாகிறது என்பதையும் நிதானமாக செய்யும் போது நன்றாக சிந்தித்து எப்படி செய்யலாம் என்று திட்டம் தீட்டி நினைத்ததை செய்ய முடிக்க முடிகிறது. பதறாதீர்கள் எதற்கும்.
5. பாக்கு வெட்டிக்குள் அகப்பட்ட பாக்கை போல
பல பெற்றோர்கள் பழமை விரும்பிகளாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு புதியவைகள் புதுப்பிக்கப்படுவதில்லை. பிடிப்பதும் இல்லை. தாங்கள் வளர்ந்த வழியிலேயே தங்கள் குழந்தைகளும் வளர வேண்டும் என்பதில் பாக்குவெட்டிக்குள் அகப்பட்ட பாக்கை அமுக்குவது போல குறியாக இருந்து குழந்தைகளை திருப்பப் பார்க்கிறார்கள்.
இது வேகமாக மாறிவரும் உலகம். பழமைகள் இன்று பல பழங்கதைகள் ஆகிவிட்டது. புதுமைகள் வரவேற்கப்பட வேண்டியது மட்டுமல்ல. அனுபவிக்க படவேண்டியதும் கூட. இதற்காக பெற்றோர்கள் குழந்தைகளுக்காக வளைந்து கொடுக்க வேண்டாம். அவர்களை வளைக்காமல் இருந்தாலே போதும்.
No comments:
Post a Comment