சில பழமொழிகளையும் அதன் விளக்கங்களையும் அறிவோமா? Want to know some Tamil Proverbs and their explanations in Tamil? Tamil Pazhamozhigal
1. ஏமாந்தவன் ஏமாந்து கெட்டான் ஏமாற்றியவன் இடிவிழுந்து கெட்டான்
யார் தலையை மொட்டை அடிக்கலாம் என்று ஏமாறுகிறவனக்காக வலைவிரித்து காத்திருக்கிற உலகமிது. ஆக, இங்கு ஏமாற்று வித்தைகள் நடப்பது என்பது ஊர்ஜிதமாகி விட்ட பிறகு ஏன் மாறாமல் இருக்கும் வகையில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது தான் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வழி.
இது ஒருபுறமிருக்க, பிறரை ஏமாற்றுகிறவன் உருப்படுகிறானா என்றால் கண்டிப்பாக இல்லை. ஏமாற்றுவது மனசாட்சிக்கு முதல் எதிரி. மனசாட்சி இதயத்தை துளைத்தெடுக்கற வண்டு. இது துளைத்தால் மனநோயை உண்டாக்காமல் விடாது. இரண்டாவதாக வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகத்தில் உண்டு. அதனால் ஏமாற்றியவன் ஏமாற்றப்படுவது சத்தியம்.
2 எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?
சாதாரண மனிதனிடம் இயல்பாக காணப்படும் குணம் இது. அவன் பிறரிடம் எதையாவது எதிர்பார்க்கிறான். பிறகு எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விடுகிறான். தன்னிடம் இருக்கும் பொருள் எதுவுமே பிறர் வசம் போய்விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறான்.
பிறரிடமிருந்து பெறும் போது இருக்கும் மகிழ்ச்சி, அதையே பிறர்க்கு கொடுக்கும் போது இருப்பதில்லை. கொடுப்பவன் தான் எத்தனை நாட்களுக்கு என்று கொடுத்துக் கொண்டே இருப்பான்? பிறரிடம் எதையாவது எதிர்பார்த்து கொண்டு இருப்பவனுக்கு இது ஒரு நினைவூட்டல். கொடுக்கல் வாங்கல் மூலமாகத்தான் நட்பு உறவு பலப்படும் தவிர வெறும் "வாங்குதல்" மூலமாக மட்டுமல்ல.
3. ஊருக்கு ஆகாதவன் வீட்டுக்கும் ஆகான்
நமக்காக நாம் வாழ்வது பெரிது இல்லை. அது புத்திசாலித்தனமல்ல. ஊரோடு ஒத்து வாழ வேண்டும். அதனால் ஊரார் நாம் அவர்களுக்கு நல்லவர்களாக பயன் மிக்கவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதுதான் உலக நடப்பு.
அப்படி நாமும் நடந்து கொள்வதில்தான் நம் வாழ்க்கையின் வெற்றி ரகசியம் இருக்கிறது. ஊராரின் எண்ணங்களுக்கு ஏற்ப நாம் வளைந்து வாழ்வது தலைகுனிவு அல்ல. அது தான் நம்மை படியேற்றும் ஏணி. ஒன்றை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.
ஒரு நாள் அல்ல, இன்னொரு நாள் நமக்கு ஊராரின் உதவி தேவையாக இருக்கும். அதனால் ஊர் மெச்சும் வகையில் வாழக் கற்றுக்கொண்டால் போதும். வீட்டுக்கு தன்னால் நம்மால் பெருமை கிட்டும்.
4. உதட்டில் உறவும் உள்ளே பகையும்
நாம் என்றென்றும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று வேண்டாத விஷயம். உறவு என்பது உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. உள்ளத்தோடு சம்பந்தப்பட்ட எதற்குமே அழிவு என்பது கிடையாது.
நம் உறவுகள் நம்மை விட்டு பிரிந்து போகின்றன என்றால் அதற்கு காரணம் நமது உறவினர்களை, நண்பர்களை, தெரிந்தவர்களை என்று அனைவரையும் உதட்டளவில் போலித்தன்மையோடு உபசரிப்பது தான்.
உறவுக்கு பணம், சாப்பிட பண்டம் என்று எதுவும் தேவை இல்லை. நீங்கள் மற்றவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாத நிலையில் இருங்கள். பாதகம் இல்லை.
ஆனால் உள்ளன்போடு பேசிப் பழகுங்கள். காழ்ப்புணர்ச்சி காட்டாதீர்கள். உங்கள் ஆனந்தம் உறவின் பலத்தில் பெருகிவது உறுதி.
5. ஈயாதார் வாழ்ந்தென்ன? இண்டஞ்செடி தழைத்ததென்ன?
சில செடிகள் தன் பாட்டுக்கு வளர்ந்து கொண்டே போகும். ஆனால் இந்த செடிகள் எதற்கும் யாருக்கும் பயன்படாது. மாறாக, கேடு விளைவிக்கும். உதாரணம் பார்த்தீனிய செடி. இது கண்ட கண்ட இடங்களில் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் இந்த செடியால் என்ன பயன்? இது மனிதனுக்கு நோய் உண்டாக்கி தீங்கு செய்கிறதே ஒழிய ஒரு வழியிலும் பிரயோசனம் இல்லை. இந்த பார்த்தீனியம் செடி போல தான் நம்மில் பலரும் பயன் இல்லாமல் இந்த உலகத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறோம்.
நம் பாட்டுக்கு பணம் சேர்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை பிறருக்கு கொஞ்சமேனும் தானமாகக் கொடுக்க மனசு மட்டும் இல்லை. பணம் எப்படியாவது பத்திரமாக இருந்தால் போதும் என்று எண்ணுகிறோம் தவிர, அது பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணம் மாத்திரம் வராமல் போகிறது.
நம்மிடம் இருப்பதில் கொஞ்சமேனும் தானம் செய்தால் தான் நம்மிடம் இருக்கும் செல்வம் பெருகிக் கொண்டே போகும். இல்லை என்றால், அது பார்த்தீனியம் செடியாக பயனில்லாமல் போய் விடும் என்பதோடு, அநியாயமாக கொள்ளையடிக்கப்பட்டும் விடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
No comments:
Post a Comment