வீரியம் பெரியதா? காரியம் பெரியதா? - தமிழ்ப் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
வீரியம் பெரியதா? காரியம் பெரியதா?
வீரியம் என்பதை இங்கு தற்பெருமை என்று எடுத்துக் கொள்ளலாம். வீறாப்பு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இரண்டுமே மனிதன் அழிந்து போவதற்கு வழி செய்யும் அரக்கர்கள்.
ஏன் என்றால் தற்பெருமையும் வீறாப்பும் மனிதனின் சுயநலத்தை காட்டுகின்றன. இதனால் பொதுநலம் அடிபட்டுப் போய்விடுகிறது. ஒரு வேளை இல்லை என்றாலும் இன்னொரு வேளை நம்முடைய காரியம் நிறைவேற வேண்டுமானால் அதற்கு பிறரின் உதவி தேவையாக இருக்கும்.
அந்த காரியம் முடிய வேண்டும் என்றால் வீரியமா காட்டமுடியும்? வீரியம் என்பது முடிகிற காரியத்தை முடிக்க விடாத சத்துரு. அதாவது விரோதி. .நம்முடைய காரியம் முடிய வேண்டும் என்றால் அதில் கருணை இருக்கவேண்டும். கட்டளை இருக்கக்கூடாது. அன்பு இருக்கவேண்டும். கண்டிப்பு இருக்கக்கூடாது. நம்மைப் பற்றி பிறர் பெருமையாகக் கூறுவதைத்தான் தற்பெருமையாக எண்ண வேண்டுமே தவிர, நாம் புராணத்தை நாமே தம்பட்டம் அடிப்பது அல்ல.
தற்பெருமையும் வீறாப்பும் பிறரின் முகம் சுளிக்க வைப்பவை. நண்பனையும் எதிரி ஆக்குபவை. அனைத்துக்கும் மேலாக அது கெட்ட எண்ணத்தை உருவாக்குகிற அபாய சங்கு.
இந்த அபாயச் சங்கு ஊதும் போது காரியம் கெட்டுப் போகும். வாழ்க்கையும் முடிந்து போகும். முடிவாக சொல்வதானால் வீரியம் இருக்கிற இடத்தில் காரியம் நிகழாது.
No comments:
Post a Comment