Tamil Nadu Today's News Bulletin in Tamil | Today's Flash News (14.11.2020) in Tamil | தமிழக அரசின் இன்றைய செய்தி குறிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் அறிக்கை
மதுரை மாநகர், மதுரை தெற்கு வட்டம், தல்லாகுளம் நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று (14 - 11 - 2020) காலை ஏற்பட்ட தீவிபத்தில் கட்டடம் இடிந்து விழுந்த போது அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர் திரு கே சிவராஜன் மற்றும் திரு பி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் துரதிஸ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.
கடமை ஆற்றும் போது ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பாளர்கள் திரு கே சிவராஜன் மற்றும் திரு பி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் திரு ஆர் கல்யாணகுமார் மற்றும் திரு சின்னகருப்பு ஆகிய இருவரும் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும் மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
கடமையாற்றும் போது உயிர் இழந்த தீயணைப்பாளர்கள் திரு சிவராஜன் மற்றும் திரு கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும் தியாகத்தையும் பாராட்டி அவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், தலா 15 லட்ச ரூபாய் அரசு நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 25 லட்ச ரூபாயும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த தீயணைப்பாளர்கள் திரு கல்யாணகுமார் மற்றும் திரு சின்னகருப்பு ஆகியோருக்கு தலா 3 லட்ச ரூபாய் அரசு நிதியிலிருந்து வழங்கவும், அவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு தமிழக அரசின் இன்றைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment