கிராமப் பெண்களின் கல்விக்காகப் பாடுபடும் பிளஸ் 2 மாணவிக்கு முதல்வர் விருது
பள்ளிகளிலிருந்து இடைநிற்றல் செய்த கிராமப்புற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தல், குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர்களிடம் எடுத்துரைப்பதோடு சுகாதாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார் பிளஸ் 2 மாணவி.
இச்செயலை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாணவிக்கு மாநில விருது வழங்கி கௌரவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பள்ளி செல்வதும் வீடு திரும்புவது மட்டுமே மாணவியின் அன்றாடப் பணியாக இருந்தது.
MOST READ பெண்ணின் பெருமை!
அதோடு, உறவினர் உள்ளிட்ட பிறரிடம் பேசுவதற்கு கூட தயக்கம் காட்டும் மனப்பான்மை உள்ளவராக இருந்தவர்.
ஆனால், தற்போது அப்படி இல்லை.. இன்றைய நிலையில் பள்ளியிலிருந்து இடைநின்றவர்களை அடையாளம் கண்டு, தன்னுடன் படிக்கும் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் அவர்களது பெற்றோரைச் சந்தித்து அவர்களுக்கு கல்வியின் மகத்துவத்தை விளக்கமாக எடுத்துக் கூறி பள்ளியில் சேர்த்து வருகிறார். குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கவும் உறுதுணையாக இருந்து வருகிறார்.
அதோடு, கிராமங்களில் குழந்தை திருமணங்களை ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் தடுத்தல், சுகாதாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் துணை புரிந்தும் வருகிறார்.
பள்ளிச் செல்லும் வயதில், அவரது சமூக சேவையால், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சென்னை மற்றும் புதுதில்லி வரை சிறப்பு விருந்தினராகச் சென்று பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்றோர் மத்தியில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைகள் பற்றியும் பேசி மற்றவர்களை வாய் பிளக்கச் செய்கிறார் பிளஸ் 2 மாணவி.
அந்த மாணவி வேறு யாருமல்லை, திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேலகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கே.தேவன் - கோகிலா தம்பதியரின் மகள் டி.நர்மதா(17). இவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் ஒரு சகோதரன், சகோதரியும் உண்டு. தற்போதைய நிலையில் ஊத்துக்கோட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார்.
அதோடு கிராம அளவிலான குழந்தைகள் நலக்குழு மற்றும் கிராம முன்னேற்ற குழுவிலும் உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் கிராமங்களில் குழந்தைகள் கல்வி கற்கவும், எக்காரணம் கொண்டும் குழந்தை திருமணம் நடைபெறக் கூடாது என்பது குறித்தும் விவரமாக பெற்றோர்களிடையே மாணவி எடுத்துரைத்தும் வருகிறார்.
இதற்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் ஊக்கமாக இருந்து வருகின்றனர். மேலும், சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்த தமிழக முதல்வர் நிகழாண்டுக்கான பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது, ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் ஊக்கப்படுத்தியுள்ளார்.
எனவே சிறு வயதிலேயே அரசு பள்ளிக்கு பெருமைத் தேடித்தந்த மாணவியை ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிசெல்வி, மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
இதுகுறித்து மாணவி நர்மதா நம்மிடம் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பள்ளிக்கூடம், அதை விட்டால் வீடுதான் கதியாய் இருப்பேன். வீட்டிற்கு யார் வந்தாலும் பேசுவதற்கு தயக்கம் காட்டுவேன். இதனால் உறவினர்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளேன்.
இந்த நிலையில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் குழந்தைகள் உரிமைகள், குழந்தை திருமணம் தடுத்தல் போன்ற கூட்டங்கள் நடத்துவார்கள். அதேபோல் ஊராட்சி கூட்டங்களில் பங்கேற்று சாலை வசதி, குடிநீர் பிரச்னைகள் குறித்து பேசியுள்ளேன். இதனால் பலரது எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதால் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க மாட்டார்கள். அதோடு, அக்கம் பக்கத்தினர் கண்டித்து வைக்க பெற்றோர்களிடம் கூறுவார்கள்.
இதை மீறி கூட்டங்களுக்கு சென்று வந்துள்ளேன். இந்த நிலையில் எனது நோக்கத்தை அறிந்த பெற்றோர்களும் அனுமதிக்க தொடங்கினர். மேலும், கிராமங்களில் உள்ள பள்ளிக்குச் சென்று குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமணம் செய்யக் கூடாது என்பது குறித்து பேசுவேன்.
அதோடு பெண் கல்வி முன்னேற்றம் குறித்த கட்டுரைப்போட்டியில் பங்கேற்றுள்ளேன்.
இதன் மூலம் கிடைத்த உத்வேகத்தால் கிராமங்களில் பள்ளிகளிலிருந்து இடைநின்ற மாணவர்களை என் சக நண்பர்களுடன் நேரில் சென்று கண்டறிந்து அவர்களது பெற்றோரிடம் எடுத்துக்கூறி மாம்பாக்கம், வேலாகபுரம் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்துள்ளேன். அதேபோல், இதுவரையில் கிராமங்களில் நடைபெற்ற 10 குழந்தைத் திருமணங்கள் ஆசிரியர்கள், காவல் துறை மற்றும் ஊராட்சி தலைவர்கள் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் வீடுகள் தோறும் சுகாதாரம் குறித்து எடுத்துக்கூறி கழிவறைகளை பயன்படுத்தவும் வலியுறுத்தியுள்ளேன். மேலும், ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை, புதுதில்லியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்ற கூட்டத்தில் பெண்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, பாலியல் பலாத்காரத்தால் பாதித்தால் எந்தத் துறையில் யாரை அணுக வேண்டும். அது தொடர்பாக செயல் வடிவமாக நாடகமாகவும் நடத்தியும் உள்ளேன்.
MOST READ தபால் ஓட்டு பெறுவது எப்படி?
இதுபோன்ற நல்ல செயலுக்கு கிராமங்களில் தொடக்கத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போதைய நிலையில் ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள். எனவே இச்செயலுக்கு அங்கிகாரம் அளித்து ஊக்கப்படுத்தும் வகையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தன்று தமிழக முதல்வர் கையால் விருது வாங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தொகையை எனது உயர் கல்விக்காக பயன்படுத்துவதோடு, குழந்தைகள் திருமணம் தடுத்தல், இடைநிற்றலை தவிர்த்தல் மற்றும் பெண் கல்வி குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றார் மாணவி நர்மதா.
No comments:
Post a Comment