வேலூர் மாவட்டத்தில் 4,400 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுப்பு
வேலூர் மாவட்டத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அகழாய்வில், சுமார் 4,400 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால மனிதர்கள் பயன் படுத்திய பானை ஓடுகள், சங்கு ஆபரணங்கள், உணவுகளை அரைப்பதற்கு பயன்படுத்தும் கற்களை கண்டறிந்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட வலசை என்ற கிராமத்தில் சந்தூர் மலையடிவாரத்தில் கடந்த ஆண்டு நடத்திய அகழாய்வில் புதிய கற்கால மனிதர்கள் கால சாம்பல் மேடு இருப்பதை கண்டறிந்தனர். தமிழகத்தில் முதல் முறையாக கிடைத்துள்ள இந்த சாம்பல் மேட்டில் இருந்து புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், இரும்பை உருக்கும் சுடுமண் குழாய்கள், விலங்குகளின் எலும்பு துண்டுகள், கற் கோடாரிகளையும் கண்டறிந்தனர்.
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சாம்பல் மேடு தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் இரண்டாம் ஆண்டாக அகழாய்வு செய்யும் பணியில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளனர்.
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் சவுந்தர்ராஜன் தலைமையில் பேராசிரியர் ஜினு கோஷி மேற்பார்வையில் 26 மாணவ, மாணவிகள் இந்த அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பட்டை தீட்டிய பானை ஓடுகள், வேட்டையாட பயன்படுத்தும் சிறிய உருளை கற்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து அகழாய்வு குழுவின் மேற்பார்வையாளர் பேரா சிரியர் ஜினு கோஷி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘இரண்டாம் ஆண்டாக தொடரும் எங்களது அகழாய்வில் சுமார் 4,400 ஆண்டுகள் பழமையான பொருட்களை கண்டறிந்துள்ளோம். புதிய கற்கால மனிதர்கள் சொரசொரப்பான பானை ஓடுகளை தேய்த்து வழுவழுப்பாக மாற்றினர். இந்த அரிய வகை பானை ஓட்டின் பெரிய பகுதி, முதன் முறையாக இங்கு கிடைத்துள்ளது.
உணவு பொருட்களை அரைப் பதற்கான கற்கள் (அம்மிக்கல்), வேட்டைக்கான நுண் கருவிகள், இரும்பை உருக்கும் பெரிய சுடுமண் குழாயுடன் இரும்பு கழிவுகள், சிறிய இரும்பு கத்தி, வேட்டையாட பயன்படுத்தும் சிறிய உருளை கற்கள், வளைய கருங்கல், ஆபரணங்களாக பயன் படுத்திய சங்குகள், மான் கொம்பும் கிடைத்துள்ளது.
இதன்மூலம் இங்கு குறைந்த எண்ணிக்கை கொண்ட சிறிய கூட்டமாக மக்கள் வாழ்ந்ததுடன், விவசாய பணிகளையும் செய் துள்ளனர் என தெரிகிறது. நாய் அல்லது நரியின் மேல் தாடை எலும்பு கிடைத்துள்ளது. இந்த மேல் தாடை எலும்பை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம். அது நாயின் எலும்பாக இருந்தால் புதிய கற்காலத்தில் மனிதர்களுடன் நாய்களும் இருந்துள்ளதை உறுதி செய்ய முடியும்.
இந்த இடத்தில் புதிய கற்காலம் தொடங்கி சங்க காலம் வரையிலான பானை ஓடுகள் கிடைக்கிறது’’ என்றார்.
அகழாய்வு பணிகள் தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் சவுந்தர்ராஜன் கூறும்போது, ‘‘அகழாய்வு பணிக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தால், இன்னும் அதிக எண்ணிக்கையிலான குழிகள் தோண்டி ஆய்வு நடத்த முடியும்.
வலசை அகழாய்வு நடைபெறும் இடத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியிலும் சாம்பல் மேடு இருப்பதை கண்டறிந்துள்ளோம். அங்கு ஆய்வு நடத்த வனத்துறை அனுமதி கொடுத்தால் இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
No comments:
Post a Comment