சித்திக் குழுவின் பரிந்துரைப்படி பல்வேறு துறை பணியாளர்களுக்கு புதிய ஊதியங்களை நிர்ணயித்து அரசாணை: 40 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊக்க ஊதிய உயர்வு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் பரிந்துரைப்படி பல்வேறு துறை பணியாளர்களுக்கான புதியஊதியங்களை நிர்ணயித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த 7-வது ஊதியக் குழுவில், பல்வேறு துறைகளின் கீழ் பல்வேறு பணிநிலைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பதாக ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டின. போராட்டங்களும் நடத்தப்பட்டன
இதையடுத்து, ஊதிய முரண்பாடுகளை போக்க கடந்த 2018பிப்ரவரியில், அப்போது நிதித்துறை செலவினப் பிரிவு செயலராக இருந்த சித்திக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு பல்வேறு சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அறிக்கை தயாரித்து, கடந்த 2019 ஜனவரியில் முதல்வரிடம் அளித்தது.
இந்த அறிக்கையில் பொதுவான சம்பள விகிதம், கோரிக்கைகள் அடிப்படையில் பல்வேறு துறைகளின் பணியாளர்களது ஊதியவரம்புகளில் இருந்த முரண்பாடுகள் களையப்பட்டு புதியசம்பள அட்டவணை தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை அடிப்படையில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதிஅரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுவான சம்பள அட்டவணைப்படி, அடிப்படை சம்பளமாக ரூ.15,700, அதிகபட்ச சம்பளமாக ரூ.2 லட்சத்து 61 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுதுபொருள் அச்சகத் துறை, சட்டப்பேரவை செயலகம், சுற்றுலா, பேரூராட்சிகள், செய்தி, அரசு அருங்காட்சியகங்கள், சிறைத்துறை, பொது நூலகம், பொதுப்பணித் துறை, பள்ளிக்கல்வி, சமூக பாதுகாப்பு, சமூகநலம், இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை, கால்நடை பராமரிப்பு, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு இருந்த ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஒரே பதவியில் 40 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றுபவர்களுக்கு ஒரு சிறப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment