குழந்தைகளிடம் நேர்மையை வளர்க்க கண்காணிப்பில்லா வாசிப்புப் பகுதி: அரசுப் பள்ளி முன்னெடுப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, March 2, 2021

குழந்தைகளிடம் நேர்மையை வளர்க்க கண்காணிப்பில்லா வாசிப்புப் பகுதி: அரசுப் பள்ளி முன்னெடுப்பு

குழந்தைகளிடம் நேர்மையை வளர்க்க கண்காணிப்பில்லா வாசிப்புப் பகுதி: அரசுப் பள்ளி முன்னெடுப்பு 


 புதுச்சேரி அரசுப் பள்ளியில் தாங்களே புத்தகங்களை எடுத்துச் சென்று திருப்பி வைக்கும் கண்காணிப்பில்லாத வாசிக்கும் பகுதியை நேர்மையான புத்தகம் என்ற தலைப்பில் திறந்துள்ளனர். காட்டேரிக்குப்பத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் தலைமை ஆசிரியர் ரூபஸ், "நேர்மையான புத்தகம் (ஹானஸ்டி புக்)" என்ற தலைப்பில் புத்தகம் வாசிக்கும் பகுதியைத் (ரீடிங் கார்னர்) திறந்து வைத்தார். அதில் தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள், கணித விளையாட்டுகள், அறிவியல் பரிசோதனைகள் மற்றும் ஓரிகாமி தொடர்பான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. 

புத்தகங்கள் மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் பள்ளி தொடங்கும் முன்பு, இடைவேளையின்போது, உணவு இடைவேளையின்போது தங்களது விருப்பமான நேரத்தில் விருப்பப்பட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினால், அங்குள்ள புத்தகத்தில் அவர்களே பதிவிட்டு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம். மறுநாள் புத்தகத்தை அந்தப் பதிவேட்டில் கையொப்பமிட்டுத் திரும்பச் செலுத்திவிடலாம். 


இதுபற்றித் தலைமை ஆசிரியர் ரூபஸ் கூறுகையில், "மாணவர்களிடம் நேர்மையை வளர்க்கும் நோக்கத்திற்காக, கண்காணிப்பு இல்லாத வாசிப்புப் பகுதிக்கு நேர்மையான புத்தகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடு மாணவர்களிடம் சுயமாகப் படிக்கின்ற பழக்கம் மற்றும் நேர்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியர் ராஜ்குமார், தேசிய அறிவியல் தினம் கொண்டாடுவதற்கான காரணம் மற்றும் ராமன் விளைவு குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். 

 மாணவர்கள், 'என் கிராமம் தூய்மையான கிராமம்' என்ற தலைப்பில் அறிவியல் நாடகத்தை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாகப் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியினை ரமேஷ் குமார், சுப்பிரமணியன், நிர்மலா, ஹேமலதா, சுஜாதா, மகேஸ்மணி, ஈலயாஸ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கினர்.

No comments:

Post a Comment