கல்வி நிறுவன கட்டட வரன்முறைக்கு சலுகை தேர்தல் கமிஷன் ஒப்புதலுடன் அறிவிப்பு
கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறை கோரி, ஏப்., 4 வரை விண்ணப்பிக்க, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அவகாசம் வழங்கி உள்ளது.
தமிழகத்தில், கல்வி நிறுவன வளாகங்களில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் அதிகமாக உள்ளன.
இதில், 2011க்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்த, 2018ல் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.இதன்படி, 2018, ஜூன், 14 முதல், செப்., 13 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், நீதிமன்ற தடையால், இந்த விண்ணப்பங்கள் மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக, டி.டி.சி.பி., வெளியிட்ட அறிவிப்பு:
வரன்முறை ஆணை வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி, இந்தாண்டு பிப்., 10ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வரன்முறை விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.விண்ணப்பதாரர்கள் உரிய விபரங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட நகர், ஊரமைப்பு அதிகாரிகளை அணுகலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு, மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி, மார்ச், 22 முதல், ஏப்., 4 வரை கல்வி நிறுவன கட்டட உரிமையாளர்கள் விண்ணப் பிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் கமிஷன் அனுமதியுடன் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தில் வரன்முறை பெற விரும்புவோர், www.tn.gov.in/tcp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment