கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடருமா?
உயர்கல்வித்துறை செயலாளர் இன்று ஆலோசனை
கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடரலாமா என்பது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
பள்ளிகள், கல்லூரிகள் மூடல்
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பரவத் தொடங்கியது. அதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்ததால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டே இருந்தன.
MOST READ நகங்களைப் பராமரிப்பது எப்படி?
கொரோனா பாதிப்பு குறைந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீதமுள்ள மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கின. இருப்பினும் ஆன்லைன் வகுப்புகளும் சில கல்லூரிகளில் நடந்து வருகின்றன.
அதேபோல், 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.
அரசு உத்தரவு
இந்த நிலையில் தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்த 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க நேற்று முன்தினம் அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே அவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது நேரடி வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காணொலி காட்சி மூலம் ஆலோசனை
பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவிட்டதன் தொடர்ச்சியாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அடுத்தகட்டமாக என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
அதன்படி, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) அவசரமாக கூடி ஆலோசிக்க இருக்கிறார்.
நேரடி வகுப்புகள் தொடரலாமா?
அதில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளைத் தொடரலாமா?, செமஸ்டர் தேர்வுகளை எப்படி நடத்துவது?, கல்லூரிகளில் வகுப்புகளைத் தொடருவது என்றால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது எப்படி? என்பவை உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment