அடுத்த மாதத்துக்குள்உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அடுத்த மாதத்துக்குள் (ஏப்ரல்) உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு
உத்தரவிட்டது.
கலந்தாய்வு
மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றும் ஜேக்கப், கலைச்செல்வி, ராஜேஷ், ஜெயகுமாரி, ஏஞ்சல் சினேகலதா, பெலிக்ஸ் இசபெல்லா, ஜான்சி, ரெனிஷா, பாப்பா, கிருஷ்ணகுமார் உள்பட பலர், மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நாங்கள் பதவி உயர்வு மூலம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம்.
அப்போது சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாததால் வேறு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டோம். தமிழகத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 2020-ம் ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. இந்தநிலையில் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் எங்களைப் போன்றவர்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஏப்ரல் மாதத்துக்குள்...
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment