கல்வி நிறுவன கட்டட வரன்முறை விண்ணப்ப பதிவுகள் துவக்கம்
கல்வி நிறுவனங்களின் விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் சிறப்பு வாய்ப்பு அடிப்படையில், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு பணிகள் துவங்கி உள்ளன.
தமிழகத்தில் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி இன்றியும், ஏராளமான பள்ளி, கல்லுாரி, பல்கலைகளின் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை வரன்முறைப்படுத்த, 2018ல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், நீதிமன்ற தடையால், பரிசீலிக்க முடியாமல் போனது. இதில், நீதிமன்ற தடை சமீபத்தில் நீக்கப்பட்டதால், வரன்முறை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த முறை விண்ணப்பிக்க தவறியோர், மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில், சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச், 22 முதல் ஏப்., 4 வரை விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து, டி.டி.சி.பி., அதிகாரிகள் கூறியதாவது:கல்வி நிறுவன கட்டட வரன்முறைக்கு, ஆன்லைன் வாயிலான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது. கல்வி நிறுவனங்கள், கட்டட வரன்முறை கோரி விண்ணப்பித்து வருகின்றன.
இதில், சம்பந்தப்பட்ட கட்டடங்களின் தற்போதைய உறுதி தன்மை குறித்து, உரிமம் பெற்ற பொறியாளர், கட்டட அமைப்பியல் வல்லுனர், வடிவமைப்பாளர் ஆகியோர், பிரமாண பத்திரம் அளிக்க வேண்டும்.
இந்த ஆவணத்தில் இருக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே, பரிசீலனைக்கு ஏற்கப்படும்.ஏற்கனவே விண்ணப்பித்தோரிடமும், தற்போதைய நிலவரப்படியான உறுதி சான்று பெறுவது அவசியம். இதுகுறித்த அறிவுறுத்தல்களை, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment