மருத்துவத் துறையில் மகளிர்: அடித்தளமிட்ட ஐடா ஸ்கடர்
கர்ப்பிணிகளுக்கு ஆண்கள் மருத்துவம் பார்க்கக்கூடாது என நிலவிய மூடநம்பிக்கையை அடியோடு சாய்த்து இன்று சர்வதேச அளவில் மருத்துவத்துறையில் இந்திய மகளிர் சாதனை படைப்பதற்கு அடித்தளமிட்ட ஆங்கிலேய பெண்மணி ஐடா ஸ்கடர்.
அவர் உருவாக்கிய வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நூறாண்டுகளை கடந்த நிலையில், சர்வதேச அளவில் மருத்துவத்துறையில் தனிப்பெரும் இடத்தை பிடித்து நாட்டு பெருமை தேடித்தந்து கொண்டுள்ளது.
அத்தகைய தன்னலம் கருதாத ஐடா ஸ்கடர் குறித்தும், அவர் உருவாக்கிய சிஎம்சி மருத்துவமனை குறித்தும் சர்வதேச மகளிர் தினத்தில் அறிந்து கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
மூடநம்பிக்கை...
திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக பணியாற்றி வந்த அமெரிக்க மருத்துவர் ஜான் ஸ்கடர், சோபியா ஸ்கடர் தம்பதிக்கு 5-ஆவது குழந்தையாக 1870 டிசம்பர் 9-ஆம் தேதி பிறந்தவர் ஐடா ஸ்கடர்.
அந்நாட்களில் தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஆண்கள் பிரசவம் பார்க்கக் கூடாது என்ற மூட நம்பிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வந்தன.
இதனால், கர்ப்பிணிகள் உயிரிழப்பு அதிகரித்து வந்ததைக் கண்டு மனதளவில் பாதிக்கப்பட்ட ஐடா ஸ்கடர், 1899-ஆம் ஆண்டு நியூயார்க் நகரிலுள்ள கார்நெல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவரானார்.
பின்னர், தமிழகம் திரும்பிய அவர், மருத்துவ சேவை செய்யவும், குறிப்பாக பெண்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்திடவும் ஆர்வம் கொண்டிருந்தார்.
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி...
இதையடுத்து 1900-இல் அவரது தந்தை மரணம் அடையும் வரை அவருடன் இணைந்து மருத்துவப் பணி மேற்கொண்டு வந்த ஐடா ஸ்கடர், அப்போதே அதிகளவில் பெண்களை மருத்துவப் பணிக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் செவிலியர் பள்ளியையும் தொடங்கினார்.
தந்தை மரணத்துக்குப் பிறகு மருத்துவப் பணியில் முழுப் பொறுப்பையும் ஐடா ஸ்கடர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த வங்கியாளர் ஷெல் என்பவர் அளித்த 10 ஆயிரம் அமெரிக்க டாலர் நன்கொடையைப் பயன்படுத்தி 1902-ஆம் ஆண்டு வேலூரில் ஒரு சிறு மருத்துவமனையைத் தொடங்கினார்.
ஷெல் மருத்துவமனை என்ற பெயரில் இயங்கி வந்த இந்த மருத்துவமனையில், சிகிச்சையும், மருத்துவமும் இலவசமாக அளிக்கப்பட்டன. தற்போது அனைத்து வசதிகளுடனும், நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், 2000 படுக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாகவும், உலகின் மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாகவும் இது விளங்குகிறது.
என்ஏபிஹெச், என்ஏபிஎல் தரச்சான்றுகளுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 8 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இதனிடையே, ஐடா ஸ்கடர் உருவாக்கிய நர்சிஸிங் பள்ளி, 1918-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக அனுமதியுடன் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக உருவெடுத்தது.இங்கு எல்.எம்.பி (லைசன்ஸ்டு மெடிக்கல் பிராக்டிஷனர்) என்ற மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டு, 1942-ஆம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ் படிப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இக்கல்லூரியில் எம்பிபிஎஸ், நர்ஸிங் உள்ளிட்ட 179 வகையான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
நுழைவுத் தேர்வு...
தொடக்கத்தில் இங்கு 100 சதவிகித மருத்துவக் கல்வி இடமும் பெண்களுக்கே அளிக்கப்பட்டன. 1945-ஆம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளில் ஆண்களும் சேர்க்கப்படுகின்றனர். எனினும், இன்றளவும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பெண்களே அதிகளவில் படிக்கின்றனர்.
MOST READ Good News வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்
இக்கல்லூரியில் 1970-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு வழிமுறைகளைத்தான் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகமும் கடைப்பிடித்து வருகின்றன.
நூற்றாண்டு விழா...
நாடு முழுவதும் 20 மருத்துவமனைகளை நிர்மானித்து அந்த மருத்துவமனைகளுக்கென சிறந்த மருத்துவர்களையும் உருவாக்கி அனுப்பி வைத்துக் கொண்டுள்ளது வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி.
இங்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 3 ஆயிரம் கல்விக் கட்டணத்தில் படிப்பதற்காக மாணவர்கள் தேர்வு செய்யப்படுபவர். தனது மருத்துப் படிப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் கிராமப்புற சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்தும் பெறப்படுகிறது. இத்தகைய ஒப்பந்த முறையை நாட்டில் அறிமுகப்படுத்தியது வேலூர் சிஎம்சியையே சாரும்.
பாமர மக்களுக்கான மருத்துவர்களை உருவாக்குவதே தமது பணி என்கிற மாறாத கொள்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்த சிஎம்சி மருத்துவக் கல்லூரி கடந்த 2018-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கண்டது.
ஏராளமான பெண் மருத்துவர்களை உருவாக்கியவர்...
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பல்வேறு மூட நம்பிக்கைகள் நிலவிய காலத்திலேயே வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியானது ஏராளமான பெண் மருத்துவர்களை உருவாக்கிக் காட்டியது.
தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் இக்கல்லூரியை உருவாக்கிய ஐடா ஸ்கடர், 1952-ஆம் ஆண்டில் உலகளவில் சிறந்த 5 மருத்துவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் மக்கள் நலனுக்காகவே பணியாற்றி வந்த இவரை வேலூர் மாவட்ட மக்கள் "ஐடா அத்தை' என்றே அழைத்தனர்.
தனது 90-ஆவது வயதில் 1960 மே 24-ஆம் நாளில் மரணமடைந்த ஐடா ஸ்கடரின் சேவையையும், தியாகத்தையும் பாராட்டும் விதமாக இந்திய அரசு கடந்த 2000-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் நாளில் அவருக்கு சிறப்பு தபால் தலையை வெளியிட்டு கௌரவித்தது.
No comments:
Post a Comment