மறு அறிவிப்பு வெளியிடும் வரையில் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் வர தேவையில்லை
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில பணிகளுக்காக ஒரு சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், அந்த ஆசிரியர்களும் வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு வர தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வழங்க வேண்டும்.
வழிகாட்டுதல்கள்
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் மெட்டீரியல் மற்றும் ஒர்க் புக்கில் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும், வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கவும், இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள செல்போன், வாட்ஸ்-அப் அல்லது பிற டிஜிட்டல் வழிகள் மற்றும் மாற்று வழிகள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாணவர்கள் மேற்காணும் வழிகளில் அனுப்பும் பயிற்சிகளுக்கான விடைத்தாள்களை சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் தக்க நடவடிக்க மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மறு அறிவிப்பு வெளியிடப்படும்
அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டும், அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும், மாணவர்களுக்கான மேற்கண்ட பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், 2021 மே மாதம் கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இதற்கான மறு அறிவிப்பு தனியே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment