பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்தா? தலைமைச் செயலாளருடன் அதிகாரிகள் ஆலோசனை - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, April 16, 2021

பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்தா? தலைமைச் செயலாளருடன் அதிகாரிகள் ஆலோசனை

பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்தா? தலைமைச் செயலாளருடன் அதிகாரிகள் ஆலோசனை பிளஸ்-2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


உயரும் கொரோனா தொற்று 

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பின்னர் தொற்று குறைந்ததால் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 

ஆனால் மீண்டும் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதும், பிளஸ்-2 வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டன. அவர்களுக்கு தேர்வும் நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டது. உயர் கல்விக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 5-ந் தேதி முதல் அவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. ஆனால் தற்போது நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டு வருவதால் இந்த நேரத்தில் தேர்வை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

ஆலோசனை கூட்டம் 

கொரோனா தொற்று காரணமாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை நேற்று முன்தினம் அறிவித்தது. அதேபோல், தமிழகத்திலும் பிளஸ்-2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற பேச்சு நேற்று முன்தினம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தை போல தேர்வை ஒத்திவைக்கலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. 


ஓரிரு நாளில் முடிவு 

அதன்படி, சில முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது கொரோனா நோய்த் தொற்றின் 2-வது அலை தாக்கம் தமிழகத்தில் தீவிரமாக இருப்பதால், இந்த நேரத்தில் தேர்வை நடத்தாமல் ஒத்திவைக்கலாம் என்று சில அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment