தீ தடுப்பு குறித்து புகார் தெரிவிக்க செல்போனில் தீ செயலியை பயன்படுத்துங்கள் என்று பொதுமக்களுக்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீ செயலி
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இந்த தீயணைப்பு நிலையங்களை தொலைபேசி வழியாகவும், செல்போன் மூலமாகவும் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்கிறார்கள். தற்போது தீ செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதன் பயன்பாடு குறைந்து இருக்கிறது.
இது பற்றி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக வரும் அழைப்புகளை ஏற்று, அதை உடனடியாக சரி செய்து வருகிறோம். தற்போது செல்போனில் தீ என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்தும், தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
விழிப்புணர்வு
அந்த செயலியில் உதவி என்ற பொத்தானை கிளிக் செய்தால், அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு அழைப்பு செல்லும். உடன் அவர்களே உங்கள் செல்போன் எண்ணை தொடர்பு கொள்வார்கள். அதில் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.
புகார் தெரிவித்த 1 நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் நிலையத்தில் இருந்து புறப்பட்டு விடுவார்கள்.
இது தவிர சம்பவ இடம் பற்றிய விவரத்தையும் அவர்கள் அறிந்து, விரைந்து வந்து, தீ தடுப்பு அல்லது மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆகவே இந்த செயலியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
மேலும் இது பற்றி 11 தீயணைப்பு நிலையங்களிலும் விளம்பர பதாகை வைத்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment