கொரோனா தொற்றால் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தப்படும் நிலையில், மாணவர் சேர்க்கைக்காக, பல தனியார் பள்ளிகள் சலுகைகளை அறிவித்துள்ளன.
கொரோனா தொற்றின் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகளில், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும், வழக்கம் போல, கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. நம் நாட்டிலும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஓர் ஆண்டாக நேரடி வகுப்புகள் நடக்கவில்லை.
அதனால், பள்ளிகளில் மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதும், பள்ளி விட்டு பள்ளி மாறுவதும் அதிகரித்துள்ளது.
பெற்றோர் பலர் வாழ்வாதாரம் இழந்ததாலும், பொருளாதார பிரச்னையாலும், தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை மாற்றியுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டு முடியும் நிலையில், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாகி உள்ளன.
ஏற்கனவே, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், புதிய சேர்க்கைக்கு, பள்ளிகள் தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக தனியார் பள்ளிகளில், புதிய மாணவர்களை சேர்க்க நன்கொடை வசூலிக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கு தனி கட்டணம், கல்வி கட்டணம், சீருடை கட்டணம், கல்வி சார் இணை பயிற்சிகளுக்கு தனி கட்டணம் என, விதவிதமாக கட்டணம் வசூலிக்கப்படும்.
தற்போதைய நிலையில், கல்வி கட்டணத்தை செலுத்தவே, பெற்றோர் சிரமப்படுவதால், நன்கொடை இன்றி மாணவர்கள் சேர்க்கையை நடத்த, பல பள்ளிகள் முன்வந்துள்ளன. அத்துடன், சேர்க்கை கட்டணமும் வேண்டாம் என, சில பள்ளிகள் அறிவித்துள்ளன.
இன்னும் சில பள்ளிகள், 'கட்டணத்தை பின்னர் செலுத்தலாம்; முதலில் பிள்ளைகளை சேர்த்து கொள்ளுங்கள்' என்றும், அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த அறிவிப்புகள் பெற்றோரை மகிழ்வித்தாலும், புதிய கல்வி ஆண்டிலாவது பள்ளிகள் இயங்குமா; நேரடி வகுப்புகள் நடக்குமா என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
No comments:
Post a Comment