மேம்படுத்தப்பட்ட டெலிகிராமில் பணப்பரிவர்த்தனை 2.0, வாய்ஸ் சேட்ஸ் திட்டமிடல், ஆட்டோ டெலிட் டைமர் போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், புதிதாக ஒருவரை குழுவில் சேர்ப்பதற்கு எளிமையான முறையில் லிங்க் உருவாக்கி குழுவிற்கு அழைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் செயலி இந்தியாவில் அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ளது. இதனிடையே டெலிகிராம் செயலி மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
பணப்பரிவர்த்தனை 2.0:
கடந்த 2017-ம் ஆண்டு டெலிகிராம் செயலியில் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் செயலியில் இருந்தவாறு இணைய வணிக சேவைகளுக்கு பணப்பரிமாற்றத்தை நடத்த இயலும்.
ஆனால் இந்த பணப்பரிமாற்றத்திற்கான தரவுகள் டெலிகிராமில் மீள் சேமிப்பு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது பணப்பரிமாற்றத்தின் அனைத்து தரவுகளையும் சேமிக்கும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் சேட்ஸ் திட்டமிடல்:
தட்டச்சு செய்யாமல் எளிமையாக குரல் பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பும் 'வாய்ஸ் சேட்ஸ்' அம்சம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மேம்பாட்டின் மூலம் குழு அல்லது சேனல்களில் குரல் தகவலை அட்டவணைப்படுத்தி அதனை பதிவிடும் நேரத்தை நம்மால் தீர்மானிக்க இயலும்.
குரலைப் பதிவு செய்தவுடன் டெலிகிராம் திரையின் வலதுபுறம் 'வாய்ஸ் சேட்' நேரம் தொடங்கிவிடும். அட்டவணைப்படுத்தியுள்ள கால அவகாசத்திற்கு பிறகு குழு அல்லது சேனல்களில் வாய்ஸ் சேட் பதிவாகிவிடும்.
ஆட்டோ டெலிட் டைமர்:
இந்த அம்சத்தின் மூலம் நாம் பதிவிடும் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், விடியோக்கள், குரல் பதிவுகள் போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாகவே நீக்கலாம்.
அவை நீக்கப்படுவதற்கான நேரத்தை முன்கூட்டியே தீர்மானித்துவிட வேண்டும்.
இவைகளுடன் தரவுகளைக் கோப்பு செய்யும் வசதி, அனிமேஷன் ஸ்டிக்கர்ஸ், இரவு நேரங்களில் நீண்ட நேரம் செயலியைப் பயன்படுத்தும் வகையில் 'டார்க் மோட்' போன்ற அம்சங்களுடன் புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், விடியோக்களை தனியாக வேறு செயலியில் சென்று பார்க்காமல், சேட் செய்யும் திரையிலேயே காணும் வகையில் புதிய அப்டேட்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment