செவ்வாய் கிரத்தின் பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டா்.
செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுக் கலத்திலுள்ள சிறிய ஹெலிகாப்டா், பறப்பதற்குத் தயாராக அந்த கிரகத்தின் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் நாசாவின் ஜெட் இயக்க ஆய்வகம் வெளியிட்டுள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செவ்வாய் கிரக ஹெலிகாப்டா் வெற்றிகரமாக தரையில் நிறுத்தப்பட்டது. பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலத்துடன் 47.1 கோடி கி.மீ. தொலைவு சென்ற அந்த ஹெலிகாப்டா், தற்போது இறுதியாக செவ்வாய் கிரத்தின் தரையை அடைந்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பதிவுடன், செவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறு ஹெலிகாப்டா் நிறுத்தப்பட்டுள்ள படத்தை நாசா இணைத்துள்ளது.
இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிரால் அந்த ஹெலிகாப்டரின் மின் பாகங்கள் உறைந்து பழுதாவதைத் தடுப்பதற்காக, அதில் பொருத்தப்பட்டுள்ள வெப்பமூட்டி பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று நாசா அதிகாரிகள் தெரிவித்தனா்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா அனுப்பிய பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் அந்த கிரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.
வேற்று கிரகத்துக்கு அனுப்பப்பட்டதிலேயே மிகப் பெரியதும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதுமான அந்த ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தின் ‘ஜெஸெரோ’ பள்ளப்பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உயிரினங்களின் கரிமப் படிமங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை பென்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் சேகரித்து பூமிக்கு எடுத்து வரவுள்ளது.
No comments:
Post a Comment