மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடைபெறும் சொத்துப் பதிவுகளுக்குக் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க அனுமதி அளித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ், பதிவுத்துறை தலைவருக்கு நேற்று (ஏப்.12) அனுப்பியுள்ள கடிதம்:
"துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கில், சித்திரை முதல் தேதி (14-04-2021), ஆடிப்பெருக்கு (03-08-2021), தைப்பூசம் (18-01-2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்களால் சொத்துப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்குத் தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய தினங்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும்
ஆவணப் பதிவுகளுக்குப் பதிவுச் சட்டத்தின்கீழ் உள்ள Table of Fees இனம் 17 (3)-ன் a, b, c-ல் கூறப்பட்டவாறு, கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்குமாறு கோரப்பட்டது.
அதன் அடிப்படையில், தங்களின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்ததில், சித்திரை முதல் தேதி (14-04-2021), ஆடிப்பெருக்கு (03-08-2021), தைப்பூசம் (18-01-2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது".
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment