நிகழ் வாரத்தில் உலகிலேயே... ஏன் மற்றோர் உலகத்திலும் புகழ்பெற்ற செல்ஃபி எது தெரியுமா? செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் விண்கலத்தின் ஆய்வு வாகனம் "இன்ஜெனியூட்டி' என்ற சிறிய ரக ஹெலிகாப்டருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபிதான்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பெர்செவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.
அந்த விண்கலத்தின் ஆய்வு வாகனத்தின் வயிற்றுப் பகுதியில் இணைத்து அனுப்பப்பட்டிருந்த சிறிய ஹெலிகாப்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செவ்வாயின் தரைப்பரப்பில் வெற்றிகரமாகத் தடம் பதித்தது. அப்போது எடுக்கப்பட்டதுதான் இந்த செல்ஃபி.
செவ்வாயின் ஜெஸேரோ பள்ளத்தாக்குப் பகுதியில் பெர்செவரன்ஸ் தரையிறங்கியுள்ளது. ஆய்வு வாகனத்திலிருந்து 13 அடி தொலைவில் ஹெலிகாப்டர் காணப்படுகிறது.
ஆய்வு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கேமரா மூலம் இந்த செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது. 62 தனிப் புகைப்படங்களை இணைத்து இந்த செல்ஃபி படம் உருவாக்கப்பட்டுள்ளதாக நாசாவின் ஜெட் புரபல்ஸன் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
ஆய்வுவாகனத்தில் இருந்து பிரிந்து செவ்வாயின் கடும் குளிரில் தனித்துச் செயல்பட்டது இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்.
அதையே பெரும் சாதனையாகக் கருதிய நாசா, தற்போது ஹெலிகாப்டர் முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் பறப்பதை எதிர்நோக்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்த தடயங்களைத் தேடியே பெர் செவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விண்கலம் என்னென்ன கண்டுபிடிப்புகளைத் தரப் போகிறதோ, அதற்கு இடையே இந்த செல்ஃபிக்கும் ஓர் இடம் உண்டு.
No comments:
Post a Comment