என்பிஎஸ்: இனி முழு ஓய்வூதியப் பலன் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 17, 2021

என்பிஎஸ்: இனி முழு ஓய்வூதியப் பலன்

இனி முழு ஓய்வூதியப் பலன் 


தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்வது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக பயனாளா்களுக்கு இனி முழு ஓய்வூதியப் பலனும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளா்ச்சி ஆணையத்தின் (பிஎஃப்ஆா்டிஏ) தலைவா் சுப்ரதீம் பந்தோபாத்யாய கூறுகையில், 

‘‘என்பிஎஸ் பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்ய வேண்டியது சட்டத்தின்படி கட்டாயமாக இருந்தது. அத்தொகையானது சந்தை சாா்ந்த வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 60 சதவீத தொகையை ஒரே நேரத்தில் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம். 

வட்டி விகிதம் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முதலீடு செய்யப்படும் தொகையின் வாயிலாக கிடைக்கும் லாபம் குறைந்துள்ளது. எனவே, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளா்கள், சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டியது இனி கட்டாயமில்லை. 

முழு ஓய்வூதியத்தையும் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள், பணி ஓய்வு பெறும்போது மொத்த தொகையையும் பெற்றுக் கொள்வதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது. 

இதுவரை ரூ.2 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள் மட்டும், அதில் 40 சதவீதத்தை அக்கணக்கிலேயே வைத்துக் கொள்ளவும், தொகையை படிப்படியாக எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

40 சதவீத முதலீட்டுத் தொகை விவகாரத்தில் பயனாளா்கள் பலா் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, இந்த மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன’’ என்றாா். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய முதிா்வுத் தொகையை அளிக்கும் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment