பலரும் அதிகம் அறிந்திடாத, அதேவேளையில் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்பில் இருக்கும் விஷயங்களை உள்ளடக்கிய படிப்புகள் ஏராளம் இருக்கின்றன. அவைகளை கற்று தேர்ந்து வேலை கிடைப்பதற்கான போட்டா போட்டியில் இருந்து விடுபட்டு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி சம்பாதிக்கலாம். அத்தகைய படிப்புகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...
* உணவு தொழில்நுட்பம்:
அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளின் தன்மையை மதிப்பீடு செய்யும் படிப்பு இது. உணவை பதப்படுத்துதல், அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாளுதல், பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்தல், பாதுகாப்பான முறையில் சேகரித்து வைத்தல், வினியோகம் செய்தல் போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். படிப்பை முடித்த பின்பு உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள், ஆய்வகங்கள், ஓட்டல்கள், குளிர்பான தொழிற் சாலைகள், அரிசி ஆலைகள், மதுபான தொழிற் சாலைகள் போன்றவற்றில் பணிபுரியலாம்.
* பால் தொழில்நுட்பம்:
‘டெய்ரி டெக்னாலஜி’ எனப்படும் இது தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை கொண்ட படிப்பாக பார்க்கப்படுகிறது. பால் பொருட் களின் உற்பத்தி, தர பகுப்பாய்வு, ஆராய்ச்சி போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. 3 ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பை முடித்ததும் பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கலாம். மேலும் பால் பொருட்களை தயார் செய்து சொந்தமாக தொழில் செய்தும் வருமானம் ஈட்டலாம்.
* நிகழ்ச்சி மேலாண்மை:
எந்தவொரு விழாவாக இருந்தாலும் சரியான திட்டமிடுதலுடன் நேர்த்தியாக அதனை வழிநடத்தி செல்வதில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது. விழா வைபவங்களை சிறப்பாக நடத்தி முடிக்க கற்றுத்தரும் கல்வியாக அமைந்திருக்கிறது, ‘ஈவண்ட் மேலாண்மை’. திருவிழாக்கள், மாநாடுகள், வீட்டு விசேஷங்கள், சங்க நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என எந்த விழாவாக இருந்தாலும் மற்றவர்கள் நடத்து வதில் இருந்து தனித்துவமாக மிளிர வைக்கும் நுணுக்கங்களை மூன்று ஆண்டு படிப்பாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.
* பெட்ரோலியம் என்ஜினீயரிங்:
இயந்திர யுகத்தை இயக்கும் இன்றியமையாத பொருளாக எரிபொருள் மாறிவிட்டது. அதுசார்ந்த படிப்புகளுக்கு தனி மவுசு இருக்கிறது. கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவாக இருக்கக் கூடிய ஹைட்ரோகார்பன்களின் உற்பத்தி தொடர்பான படிப்பு, பெட்ரோலியம் என்ஜினீயரிங். 4 ஆண்டு கால இந்த படிப்பை முடித்ததும் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற எரிபொருள் சார்ந்த தொழிற்சாலைகளில் பணி புரியலாம்.
* செல்ல பிராணிகள் பராமரிப்பு:
வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்க்க ஆர்வம் காட்டுபவர்கள் அவசியம் படிக்கவேண்டிய படிப்பு, ‘பெட் குரூமிங்’. சில பிராணிகள் சுகாதார குறைபாடு பிரச்சினையால் பரிதவிக்கும். அவற்றின் உணர்வுகளை வளர்ப்பவர் களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். செல்ல பிராணிகளை எப்படி வளர்த்து, பராமரிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் இந்த படிப்புக்கு இந்தியாவில் இப்போதுதான் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.
* தேநீர் ருசிபார்த்தல்:
உலகம் முழுவதும் மக்கள் விரும்பி பருகும் பானங்களில் தேநீருக்குத்தான் முதலிடம். எந்த டீ ருசியாக இருக்கும் என்பதை அறிய நாவின் தேடுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கு பயணம் மேற்கொண்டாலும் அங்கு தயாரிக்கப்படும் தேநீர் வகைகளை ரசித்து ருசித்து பார்க்க பலரும் தவறமாட்டார்கள். ‘டீ டேஸ்டிங்’ படிப்பு தேநீரை பருகி அதன் சுவையை மதிப்பீடு செய்யும் விதத்தை கற்றுத்தருகிறது.
* தோட்டக்கலை திட்டம்:
இதில் நர்சரி மற்றும் பண்ணை வீட்டு மேலாண்மை போன்ற படிப்புகள் உள்ளடங்கி இருக்கின்றன. குறுகிய காலகட்டத்தை கொண்ட இந்த படிப்பில் பல்வேறு விதமான செடிகளை வளர்க்கும் விதம் பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் எந்தெந்த செடிகளை எந்ெதந்த பருவ காலங்களில் வளர்க்க வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக செடிகளை வளர்க்கும் தோட்டக்கலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்று எண்ணும் அளவிற்கு சுவாரசியமிக்க பல்வேறு விஷயங்களை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளலாம்.
* மலையேற்ற படிப்பு:
இயற்கையை நேசிப்பவர்கள் மேற்கொள்ளும் சாகச பயணமான மலையேற்றத்தை எப்படி மேற்கொள்வது என்பதை கற்றுத்தருகிறது, ‘மவுண்டெய்னரிங்’. இதில் பலகட்ட பயிற்சிகள் இருக்கின்றன. மலையேற்ற பயணத்தின்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்கமாக கற்றுக் கொடுக்கிறார்கள். இதனை படித்து முடிப்பவர்கள் பயிற்சியாளராக பணிபுரியலாம்.
No comments:
Post a Comment