12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்தும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வரும் 10-ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மே 5 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ ரத்து செய்தது. மேலும், பிளஸ் 2 பொதுத் தேர்வையும் தள்ளி வைத்தது.
இதற்கிடையே தமிழகத்திலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்தன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் இல்லாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு நேற்று (மே.7) பதவியேற்றது. முதல்வருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்தும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பிடும் முறை குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
10-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை வரைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment