12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? சி.பி.எஸ்.இ. அதிகாரி பதில் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, May 15, 2021

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? சி.பி.எஸ்.இ. அதிகாரி பதில்




12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு சி.பி.எஸ்.இ. அதிகாரி பதில் அளித்துள்ளார்.
ஒத்திவைப்பு
கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி சி.பி.எஸ்.இ. அறிவித்தது. 

இதுபோல பல மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக சி.பி.எஸ்.இ.12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடிக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கடந்த 4-ந் தேதி தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான சூழ்நிலை சரியாக அமையாததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுக்கான தேதி 15 நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு முறையாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
ரத்து செய்ய கோரிக்கை
இப்படியே கொரோனா காரணமாக நாட்கள் நகர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தேர்வை நடத்த வேண்டாம் என்கிற குரலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களில் ஒரு தரப்பினர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சி.பி.எஸ்.இ.க்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கல்வியாளர்கள் சிலரும் இதை ஆமோதித்து உள்ளனர். இதனால் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சாத்தியம் உள்ளதா? என்று டெல்லியில் நேற்று சி.பி.எஸ்.இ. அதிகாரி ஒருவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். 

அதற்கு அந்த அதிகாரி பதில் அளிக்கையில், “தேர்வை ரத்து செய்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சுயமாக உடனே முடிவு எடுத்துவிட முடியாது. தற்போதைய சூழலை பொறுத்தவரை தேர்வு தாமதமாவது கவலை அளிப்பதாக உள்ளது. கொரோனா சூழலை கணக்கில் கொள்ளும்போது தேர்வை ரத்து செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி ரத்து செய்யப்பட்டால் மாணவர்களுக்கு மாற்று மதிப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும். எனவே இதுபற்றி சி.பி.எஸ்.இ. மதிப்பாய்வு செய்து வருகிறது” என்று கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
இதற்கிடையே, தேர்வை தாமதமாக நடத்துவது மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி அனுமதி பெறும் வாய்ப்பை இழக்க வைத்துவிடும். எனவே, தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது. தேர்வை ரத்து செய்வதற்கு இப்படி ஆதரவு குரல் வலுத்து வரும் அதேவேளையில் தேர்வை நடத்துவது அவசியம் என்றும் நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். தேர்வை ரத்து செய்தால் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில் குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும், தேர்வை நடத்துவதில் உள்ள சிரமங்களை எதிர்கொள்ளும் சவால்களை விட, ரத்து செய்வதால் ஏற்படும் சவால்கள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே தேர்வு குறித்த இறுதி முடிவு வருகிற 25-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment