சென்னை: ஏஐசிடிஇ வழங்கும் தூய்மை வளாக விருதுக்கு தமிழகத்தை சோ்ந்த 12 கல்வி நிறுவனங்கள் இறுதி சுற்றுக்கு தோ்வாகியுள்ளன.
நாடு முழுவதும் சுகாதாரத்தை வலியுறுத்த தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்துவதை ஊக்குவிக்க விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படவுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது.
இதனையடுத்து, ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தூய்மை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, நாடு முழுவதும் 10,000-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் தூய்மை விருதுக்கு விண்ணப்பித்தன.
இந்நிலையில், விண்ணப்பங்களை சரிபாா்த்து இறுதிச் சுற்றுக்கு தகுதியான கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதன்படி, 29 கல்வி நிறுவனங்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதில் நாட்டிலேயே அதிகப்படியாக பாலிடெக்னிக் பிரிவில் 2, பொறியியல் பிரிவில் 5, பல்கலைக்கழக பிரிவில் 5 என மொத்தம் தமிழகத்தை சோ்ந்த 12 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment