அண்ணா பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான மறு செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 14-ந் தேதி தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய செமஸ்டர் தேர்வுகளில் குளறுபடிகள் இருந்ததால் மீண்டும் தேர்வு நடத்த மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே, அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி மறுதேர்வுகள் ஜூன் 14-ந் தேதி தொடங்க உள்ளன. மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போன்று இந்த தேர்வுகள், ஆன்லைன் வழியில் 3 மணி நேரம் நடத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக நடக்கும் தேர்வுகளுக்கு, ஏற்கனவே தேர்வு எழுதி தேர்வான அல்லது தேர்வாகாத மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 2017-ம் ஆண்டு நெறிமுறைப்படியான பாடத்திட்டத்தில், பி.இ., பி.டெக். போன்ற இளநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 14-ந் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கி ஜூலை 10-ந் தேதியில் முடிவடையும்.
எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு ஜூன் 14-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படும்.
முந்தைய பாடத்திட்டம்
2013-ம் ஆண்டு இளநிலை பாடத்திட்ட மாணவர்களுக்கு, ஜூன் 14-ந் தேதி முதல் ஜூலை 16-ந் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும். பட்ட மேற்படிப்புக்கான தேர்வுகள் ஜூலை 14-ந் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறும். ஏற்கனவே நடந்த தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள், மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இளநிலை, முதுநிலை ஆகியவற்றில் 2013-ம் ஆண்டுக்கு முந்தைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஜூன் 21-ந் தேதி முதல் ஜூலை 30-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படும். இந்த அரியர் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். ஜூன் 3-ந் தேதி வரை கட்டணம் செலுத்த அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை இப்போதே செலுத்தலாம்.
இந்த அரசைப் பொறுத்தவரை மாணவர்களின் உயிரும் முக்கியம், தேர்வும் முக்கியம் என்பதால், இந்த தேர்வை ஆன்லைன் மூலமாகவே நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கலை, அறிவியல் தேர்வுகள்
ஒரு சில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்ற கலை, அறிவியல் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கு மே 25-ந் தேதி முதல் தேர்வுகள் நடப்பதாக அறிவித்திருந்தோம்.
ஆனால் தற்போது அது ஊரடங்கு காலமாக உள்ளது. இக்காலத்தில் ஆன்லைன் மூலம் கிராமப்புற மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளது.
துணைவேந்தர்களுக்கு ஆலோசனை
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான பட்டத் தேர்வுகள், இறுதி மற்றும் அரியர் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஜூன் 15-ந் தேதியன்று தொடங்கும். ஜூலை 15-ந் தேதிக்குள் அனைத்து பாடங்களுக்கும் தேர்வுகள் முடிக்கப்படும்.
தேர்வு முடிவுகளை ஜூலை 30-ந் தேதிக்குள் வெளியிடும்படி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment