இன்று (22.05.2021) கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் நடைப்பெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, May 22, 2021

இன்று (22.05.2021) கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் நடைப்பெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரை

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.5.2021) தலைமைச் செயலகத்தில், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துதல் குறித்தும், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரை. 

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களே, மதிப்பிற்குரிய தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளே, திருமதி. சவுமியா சாமிநாதன் அவர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கக்கூடிய இக்கட்டான சூழலில் இந்த அரசு பொறுப்பேற்று இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்களின் உயிர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 

சென்ற கூட்டத்தில் இந்தத் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கின் அவசியம் குறித்து நீங்கள் அனைவரும் வலியுறுத்தினீர்கள்.  அனைவரின் கருத்துகளின் அடிப்படையில் 14-05-2021 முதல் குறிப்பிட்ட சில தளர்வுகளை மட்டும் அனுமதித்து ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மட்டுமல்லாது, நாள்தோறும் 1.6 இலட்சம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், கூடுதல் மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமித்தல் போன்ற பல்வேறு பணிகளைக் கடந்த இரண்டு வாரங்களில் செயல்படுத்தியுள்ளோம்.

மேற்கூறிய நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவும் வேகம் ஓரளவுக் கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது நாள்தோறும் 35,000 பேர் தொற்றால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டை விட மக்கள் தொகை குறைவாக உள்ள சில அண்டை மாநிலங்களில் தொற்றின் உச்சத்தில் 50,000- த்திற்கும் மேலானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்ட நிலையோடு ஒப்பிடும்போது இது குறைவாக இருந்தாலும், தொற்று தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையே காணப்படுகிறது. 

இச்சூழலில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இந்த மாத இறுதியிலோ ஜூன் மாத தொடக்கத்திலோ உச்ச நிலையை எட்டும் எனக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தொற்று, மேலும் வேகமாகப் பரவாமல் இருக்கவும், இறப்புகளைக் குறைக்கவும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. 

நான் கூறிய கருத்துகளை மனதிற்கொண்டு மருத்துவ நிபுணர்கள் அனைவரும் தமது மேலான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். தங்களுடைய கருத்துகளின் அடிப்படையிலும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் கருத்துகளின் அடிப்படையிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு முடிவு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்! 





No comments:

Post a Comment