இந்தாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு குறித்து விவாதிக்க, இன்று அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
சி.பி.எஸ்.இ., மற்றும் பல மாநில கல்வி வாரியங்கள், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப் பட்டு உள்ளது.
அதுபோல, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப் பட்டு உள்ளன.
மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக, மத்திய கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது: கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து, மாநில கல்வித் துறை செயலர்களுடன் ஏற்கனவே விவாதித்துள்ளேன்.
அதன் தொடர்ச்சியாக, இன்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள், செயலர்களின் கூட்டம் நடைபெற உள்ளது.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக காலை, 11:30 மணிக்கு துவங்க உள்ள இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.பிளஸ் 2 மற்றும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை, சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவிக்கலாம்.அவை, இன்றைய கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment