பிளஸ்-2 தேர்வு நடத்துவது குறித்து விரைவில் முடிவு! பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, May 9, 2021

பிளஸ்-2 தேர்வு நடத்துவது குறித்து விரைவில் முடிவு! பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!!!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது குறித்து தனிக்குழு அமைத்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 



அண்ணா நூலகத்தில் ஆய்வு 

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தான் பொறுப்பேற்றதும் முதல் பணியாக சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொள்ள வந்தார். தரைத்தளத்துடன் கூடிய 8 மாடி கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொரு அறையையும் நேரடியாக சென்று பார்வையிட்டார். அந்த கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். சுமார் 2 மணி நேரம் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்கிருந்து வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 



வேதனை 

ஒவ்வொரு துறையிலும் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் பராமரிக்கப்படாமல் இருப்பவை எது என்பது குறித்து ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் கூறி இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின்படி, அண்ணா நூலகத்துக்கு ஆய்வு செய்ய வந்திருக்கிறேன். நூலகத்தை பராமரிக்காமல் இருப்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பலர் இந்த நூலகத்தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகியிருக்கிறார்கள். இந்த நூலகத்தைப் பராமரிப்பதற்கான பணிகள் நடைபெறும். கருணாநிதி திறப்புவிழா செய்தபோது நூலகம் எப்படி இருந்ததோ அந்த அளவுக்கு புதுமையாக மாற்றுவோம். 

விரைவில் முடிவு 

பள்ளிக்கல்வி தொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. உதாரணமாக கல்வி கட்டணம், பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது எப்படி?, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்குவது?, கொரோனா காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் எப்படி நடத்தப்பட வேண்டும்? என்பவை தொடர்பாக ஆராய தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும். அதிகாரிகள், பெற்றோர் தரப்பில் இருந்து ஒருவர், பள்ளி நிர்வாகத்தில் இருந்து ஒருவர் என ஒரு குழு அமைக்க இருக்கிறோம். அதில் பள்ளி மற்றும் மாணவர்கள் சார்ந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்வித் தொலைக்காட்சியை நிறுத்த நினைக்கவில்லை. அதை மேலும் புதுமையாக எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து பேசி இருக்கிறோம். மாணவர்களுக்கான கல்வியுடன், கல்வி சார்ந்த பொழுதுபோக்கு விஷயங்களையும் அதில் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment