எம்.பி.பி.எஸ்., படிப்பை இந்தாண்டு நிறைவு செய்த, 4,690 டாக்டர்கள், இன்று முதல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில், 4,700க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், ஏப்ரலில் இறுதி ஆண்டு தேர்வு எழுதினர். வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியாக, குறைந்தது இரண்டரை மாதங்களாகும். கொரோனா தொற்று பரவலின் தீவிரத்தால், டாக்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த அசாதாரண சூழலை உணர்ந்த, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டது.
இதையடுத்து, 4,690 டாக்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, மருத்துவ பல்கலையின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறியதாவது:எம்.பி.பி.எஸ்., இறுதிஆண்டு தேர்வுகள் வழக்கமாக, பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு ஏப்ரல் இறுதியில் நடந்தது.பொதுவாக விடைத்தாள் மதிப்பீடு, பல்கலையில் தான் நடைபெறும். இந்தாண்டு, 'விர்ச்சுவல்' முறையில், அப்பணிகள் நடைபெற்றன.
அதன்படி, பேராசிரியர்கள் தங்களது இடத்தில் இருந்தவாறே, விடைத்தாள்களை மதிப்பீடு செய்தனர்.
பல்கலை இணைய தொழில்நுட்பம் வாயிலாக, அனைவரையும் ஒருங்கிணைத்து, கணினி வாயிலாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்றன.அதில், ஈடுபட்டிருந்த பேராசிரியர்களை, அவர்களது கணினி கேமரா வாயிலாகவே, பல்கலை நிர்வாகிகள் கண்காணித்தனர்.ஒரு வேளை கேமரா நிறுத்தப்பட்டால், உடனடியாக விடைத்தாள் திருத்தத்துக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும் வகையிலான, தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இரவு, பகல் பாராமல் தொடர்ந்து, அப்பணிகளில் அனைவரும் ஈடுபட்டதன் பயனாக, இரு வாரங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இதனால், 4,690 டாக்டர்கள், கொரோனா சிகிச்சையில் விரைந்து ஈடுபட வகை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இன்று முதல், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், அதன்கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் பணியாற்ற உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment