பி.எச்.டி., விதிமுறைக்கு எதிர்ப்பு சட்டப்பல்கலை பதிலளிக்க உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 24, 2021

பி.எச்.டி., விதிமுறைக்கு எதிர்ப்பு சட்டப்பல்கலை பதிலளிக்க உத்தரவு

பி.எச்.டி., படிப்பில் சேர, இரண்டு ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும் என்ற, அம்பேத்கர் சட்டப் பல்கலையின் விதியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப் பல்கலை, யு.ஜி.சி., பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, திருமுல்லைவாயலை சேர்ந்த, சுகன்யா ஜெப சரோஜினி என்பவர் தாக்கல் செய்த மனு: அம்பேத்கர் சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமிதி பல்கலையில், மனித உரிமை துறையில், முதுநிலை சட்டப்படிப்பும் முடித்தேன். 

உதவி பேராசிரியராக, அம்பேத்கர் சட்டப் பல்கலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறேன்.சட்டத்துறையில், பி.எச்.டி., படிப்பில் சேர்வதற்கான விதிமுறைகளை, அம்பேத்கர் சட்டப் பல்கலை வகுத்துள்ளது. இரண்டு ஆண்டுகள் சட்ட முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் தான், பி.எச்.டி.,யில் சேர தகுதி என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நான், அமிதி பல்கலையில், ஓராண்டு முதுநிலை சட்டப்படிப்பு முடித்துள்ளேன்.ஓராண்டு முதுநிலை படிப்பு, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. 2012ல், யு.ஜி.சி., பிறப்பித்த வழிமுறைகளின்படி, மத்திய, மாநில அளவிலான பல்கலையிலும், டில்லியில் உள்ள இந்திய சட்ட நிறுவனம் போன்ற, சட்டப் படிப்புகளை நடத்தும் நிறுவனங்களிலும், ஓராண்டு முதுநிலை படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 

MUST READ

பார் கவுன்சிலின் சட்ட கல்வி விதிகளும், ஓராண்டு முதுகலை படிப்பை செல்லாது எனக் கூறவில்லை. பி.எச்.டி., படிப்புக்கு, தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விதிகளின்படி, எனக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.யு.ஜி.சி.,யால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட முதுநிலை படிப்பை செல்லாததாக ஆக்குவதற்கு, சட்டப் பல்கலைக்கு தகுதி இல்லை. எனவே, பி.எச்.டி., படிப்பில் சேர, இரண்டு ஆண்டு முதுநிலை சட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் என்ற, அம்பேத்கர் சட்டப் பல்கலையின் விதிமுறைகள் செல்லாது எனவும், பி.எச்.டி., படிப்புக்கு விண்ணப்பிக்க, என்னை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும், யு.ஜி.சி.,க்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன், 16ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். பி.எச்.டி., படிப்புக்கு விண்ணப்பிக்க, மனுதாரரை அனுமதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment