செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும், விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
செம்மொழி தமிழில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, 'தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் ஆய்வாளர் விருது' ஆகியவை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வாயிலாக வழங்கப்படுகின்றன.தமிழியல் சார்ந்த ஆய்வில், ஈடில்லாத பங்களிப்பை வழங்கிய, இந்திய தமிழர் ஒருவருக்கு, தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது.
அயல்நாடுகளில் தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு, இணையில்லா பங்களிப்பை வழங்கிய, இந்திய தமிழர் ஒருவர் மற்றும் வெளிநாட்டு தமிழறிஞர் ஒருவர் என, இருவருக்கு, குறள்பீடம் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதுகளுக்கு தலா, ௫ லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கப்படும். அதேபோல், 30 முதல், 40 வயதுக்குட்பட்டோர், தமிழியல் ஆய்வில் சிறந்த பங்களிப்பை அளித்தால், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஐந்து பேருக்கு இளம் ஆய்வாளர் விருது வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு,1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்படும்.
இந்த விருது களுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என, மார்ச் 7ம் தேதி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது, கொரோனா பரவலின் தாக்கம் அதிகம் உள்ளதால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், விண்ணப்பங்களை அனுப்புவதில் சிரமம் உள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிக்க வேண்டும் என, ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, அடுத்த மாதம் வரை விண்ணப்பிக்கலாம் என, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்துள்ளது.விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த மேலும் விபரங்களுக்கு, www.cict.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment