தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு உள்ளே யும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ-பதிவு' முறை கட்டாயம் ஆகும்.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ-பதிவு' முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15-ந்தேதி அமலுக்கு வந்தது.
யார், யாருக்கு அனுமதி?
இந்த உத்தரவில், 'திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகும். இது 17-ந் தேதி (இன்று) காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்’ என்று கூறப்பட்டிருந்தது.
எனவே தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகிறது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யார், யார் வருகிறார்கள்? என்பதை கண்காணித்து, அதனடிப்படையில் கொரோனா பரவலை தடுப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
மீறினால் அபராதம்
காய்கறிகள், மளிகை, பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்வதற்கு ‘இ-பதிவு’ அவசியம் இல்லை. இந்த பொருட்களை வாங்குபவர்கள் வாகனங்களில் செல்லாமல் தங்கள் வீட்டின் அருகே உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஒரு ஏரியாவில் இருந்து மற்றொரு ஏரியாவுக்கு சென்றால் அனுமதி மறுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment