தமிழகத்தில் கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - முதலமைச்சர் அவர்கள்
விலை மதிப்பி்ல்லாத உயிர்களை இழந்திருக்கிறோம் என்பதால் தமிழகத்தில் கொரோனாவுக்கு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காணொலி காட்சி மூலம் நடந்த மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதல்-அமைச்சர் ஆலோசனை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்சியின் முதல் இலக்கு
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகம் அனைத்து துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக மாற வேண்டும் என்பதே எமது ஆட்சியின் முழு முதல் இலக்கு. அதற்காக தமிழக அரசு தேர்ந்தெடுத்து செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் மகத்தான பணி கலெக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பணியை தொய்வில்லாமலும், புதிய உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் நிறைவேற்றி வர வேண்டும்.
இந்த கூட்டம் என்பது நாளைய (இன்று) தினம் முதல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு நடக்கும் கூட்டமாகும். இந்த பெருந்தொற்று நோய் காலத்தில் உங்கள் மாவட்டங்களில் மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றி வரும் உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை கலெக்டர்கள் முதலில் உறுதி செய்ய வேண்டும். நாளை (இன்று) முதல் நமது மாநிலத்தில் முழு பொது ஊரடங்கு நடைமுறைக்கு வரவிருக்கின்றது என்பதை அறிவீர்கள். இந்த சூழ்நிலையில் மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழவகைகள், பால் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளை வழங்க சிறப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பால் மற்றும் குடிநீர் வினியோகம் சீராக இருப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வீதிகளில் வாகனம், தள்ளுவண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வேளாண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் கண்காணித்து வரவேண்டும்.
ஊரடங்கு காலத்தில் மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலமாக சிறப்பாக வீட்டுக்கு வீடு சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிவது, நோய்த்தொற்றைக் கண்டறியும் முகாம்கள் நடத்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
நோய்தொற்றை குறைக்க வேண்டும்
உங்கள் மாவட்டத்தின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அவர்களின் கருத்துகளைப் பெற்றும் கட்டுப்பாடு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பினைத் தொடர்ந்து கண்காணித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணித்து உங்கள் மாவட்டத்தில் நோய்த்தொற்று சதவிகிதத்தை குறைப்பது ஒன்றையே குறிக்கோளாக் கொண்டு செயல்பட வேண்டும்.
இக்காலக்கட்டத்தில், அரசுடன் இணைந்து செயலாற்ற பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றன. மாவட்ட அளவில் அவர்கள் பணியை ஒருங்கிணைத்து மக்களுக்கு அவர்களின் சேவையை கொண்டு சேர்க்க நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். அதற்கென மாவட்ட அளவில் ஒரு தனி அலுவலரையும் நியமிக்கலாம்.
இது சமூகத்தின் மிகமிக முக்கிய செயல்பாடாகும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், அது மேலும் பரவாமல் தடுப்பதற்கும் அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் அந்த சங்கிலியை உடைக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்காகக்தான் இந்த முழு ஊரடங்கு போடப்படுகிறது. பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தான் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற நோக்கத்தை பொதுமக்களிடம் கலெக்டர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
விலைமதிப்பில்லாத உயிர்கள்
விலைமதிப்பில்லாத உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். ஒரு பக்கம் மருத்துவ பிரச்சினைகள். இன்னொரு பக்கம் நிதி நெருக்கடிகள். இத்தகைய இரண்டு மாபெரும் இன்னல்களை ஒரே நேரத்தில் தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. எனவே, எவ்வளவு விரைவாக கொரோனா என்ற நோய்த் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கலெக்டர்கள் உங்களது இத்தனையாண்டு கால அனுபவம், அறிவு, சக்தி, திறமை அனைத்தையும் முழுமையாக பயன்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை ஆற்ற வேண்டும். உலகம் எத்தனையோ பெருந்தொற்றுகளை - பேரழிவுகளைப் பார்த்துள்ளது. அதில் இருந்து மீண்டு வந்துள்ளது. ஒரு சமூகம் பாதிக்கப்படும் போது, ஏதோ ஒரு தனிமனிதனின் முயற்சியால் அதில் இருந்து மீள்வதற்கான ஒரு ஒளி பிறக்கும். அத்தகைய ஒளியாக உங்களை நான் பார்க்கிறேன்.
நான் எனது காலத்தில் எடுத்த முயற்சிகளால் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது, கொரோனாவே இல்லை என்ற சூழலை நான் உருவாக்கினேன் என்று தலைநிமிர்ந்து நீங்கள் சொல்லக்கூடிய அளவுக்கு பணியாற்ற வேண்டும். உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களால் மட்டுமே முடியும் என்ற மிகுந்த நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் டி.ஜி.பி. திரிபாதி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மருத்துவம் மற்றும் முன்களப் பணியாளர்கள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment