பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு குறித்த மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் குறித்த அறிக்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 24, 2021

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு குறித்த மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் குறித்த அறிக்கை

செய்தி வெளியீடு எண்: 143 நாள்:23.05.2021 செய்தி வெளியீடு 

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு குறித்த மாநில கல்வி அமைச்சர்களுக்கான கூட்டம் குறித்த அறிக்கை 

(23.5.2021) மத்திய அரசின் பள்ளி கல்வித் துறை CBSE முறையில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தனர். மேலும் இக்கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் குறித்தும், அதற்குப் பிறகு மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் இக்காலகட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் முறைகள் குறித்து தமிழக அரசின் கருத்துகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் தமிழக அரசின் இறுதி நிலைப்பாட்டை மாண்புமிகு முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசிற்கு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் பேசிய மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் தமிழகத்திற்கு நீட் (NEET) தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். 

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் இக்கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது முற்றிலும் தவறானது ஆகும். தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறக் கூடாது என்பது மட்டுமல்லாது, மாணவர்கள் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.

No comments:

Post a Comment