தினம் ஒரு தகவல் : வருங்கால வைப்பு நிதி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, May 22, 2021

தினம் ஒரு தகவல் : வருங்கால வைப்பு நிதி

பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதுதான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். 


பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத் தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சி.டி.சி. முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள். சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந்தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. 

சில வருடங்களுக்கு முன்பு பி.எப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யு.ஏ.என்-யை அடிப்படையாக வைத்து பி.எப். நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும பார்த்துக்கொள்ள முடியும். இணையதளம் தவிர பி.எப். கணக்கை நிர்வகிக்க செயலி இருக்கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்முடைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். 

தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம். பி.எப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக்காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பி.எப். தொகை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பணியில் சேர்ந்து ஐந்து வருடத்துக்குள் பி.எப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எப். தொகையை எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம்.

No comments:

Post a Comment