ஆன்லைன் கல்வியில் சாதித்த இளைஞர் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, May 22, 2021

ஆன்லைன் கல்வியில் சாதித்த இளைஞர்

ஆன்லைன் கல்வியில் சாதித்த இளைஞர் ஆஸ்திரேலியாவில் பார்த்த வேலையைத் துறந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் பள்ளியைத் தொடங்கிய இளைஞர் ஒருவர், இன்று ஆண்டுக்கு கணிசமான வருவாய் ஈட்டுகிறார். அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண் சைனி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 12-ம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தார். 


அதன்பின்னர் கல்வி உதவித் தொகை பெற்று ஆஸ்திேரலியாவுக்கு சென்று, மெல்போர்ன் பல் கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். அங்கேயே 4 ஆண்டுகள் விற்பனை பிரதிநிதியாகவும் பணியாற்றினார். அதன்பிறகு ஆஸ்திரேலிய அரசின் கல்வித் திட்டத்தில் சேர்ந்து இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார், தருண் சைனி. இந்தி, ஆங்கிலத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தினார். நாடு முழுவதும் இருந்து அவரது ஆன்லைன் வகுப்பில் 8 லட்சம் பேர் சேர்ந்தனர். இன்றைக்கு அவருக்கு 40 லட்சம் ஆன்லைன் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். 

ஆன்லைன் பள்ளி யில் பல குழந்தைகளுக்கு பாடம் புகட்டும், தருண் அதேசமயம் கணிசமான வருமானமும் ஈட்டுகிறார். இது குறித்து தருண் சைனி கூறுகையில், ‘‘இன்றைக்கும் பெரும்பாலான கிராமப்புறங்களில் தரமான கல்வி கிடைப்பதில்லை. சுற்றுவட்டாரங்களில் திறமையான ஆசிரியர் கிடையாது. டியூசன் படிக்க 35 கிலோ மீட்டர் தொலைவு வரை மாணவர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. நானும் பள்ளியில் படிக்கும்போது இந்த சூழலில்தான் வளர்ந்தேன். ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பிறகும் நாட்டில் நிலைமை மாறவில்லை. ‘கல்வித்துறையில் இருக்கும் அனுபவத்தை இந்தக் குழந்தைகளுக்காக பயன்படுத்தினால் என்ன..?’ என்று தோன்றியது. 

நானும் என் குழுவினரும் இணைந்து சில மாதங்கள் ஆய்வு செய்தோம். பல மாநிலங்களுக்குச் சென்றோம். அந்தந்த மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கும் சென்றோம். மாணவர்கள் படிப்பதற்காக சந்திக்கும் சிரமங்களை அவர்களது பெற்றோரிடம் கேட்டறிந்தோம். இதன் அடிப்படையில், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘வித்யாகுல்' என்ற பெயரில் இணையம் மற்றும் யூ-டியூப்பில் ஆன்லைன் பள்ளியைத் தொடங்கினேன். 


ஆரம்பத்தில் கல்வித்துறையில் பணியாற்றுவோர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஏராளமானோர் நிதியுதவி அளித்தனர். இன்றைக்கு சுயச்சார்புடன் மாறியுள்ளோம். கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதன்பிறகு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாங்கள் செயலியைத் தொடங்கினோம். 

நம் நாட்டில் ஏராளமானோர் ஆன்லைன் பள்ளிகளை நடத்துகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தி பேசுவோர் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள உள்ளூர் மொழியை தாய் மொழியாக கொண்டுள்ளவர்களுக்கு சரியான ஆன்லைன் பள்ளிகள் இல்லை. நம் நாட்டில் 70 சதவிகித குழந்தைகள் மாநில பாடத்திட்டத்தில் படிக்கின்றனர். அதனால், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். தற்போது உத்தரப்பிரேதசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் ஆன்லைன் பள்ளி நடத்துகிறோம். 


என்னுடன் தற்போது 100 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்தி பேசும் குழந்தைகள்தான் எங்கள் இலக்காக உள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எங்களுடன் இணைந்துள்ளார்கள். ‘மொபைல் ஆப்’ அல்லது ‘கம்ப்யூட்டர்’ வழியே மாணவர்கள் ஆன்லைன் பள்ளியில் படிக் கலாம். வழக்கமான பள்ளிகளைப் போல், ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியர் இருப்பார். பணம் சம்பாதிப்பது என் நோக்கம் அல்ல. இந்தி பேசும் மற்றும் கிராமப்புற குழந்தைகள் சரியான கல்வியைப் பெற வேண்டும். கொரோனா காலத்தில் இந்தக் குழந்தைகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பெரும்பாலானோருக்கு ஆங்கில வழி கல்வி பிரச்சினையாக உள்ளது. பல பாடங்களை இலவசமாக வழங்குகிறோம். கல்விக் கட்டணத்தையும் குறைவாகவே நிர்ணயித்துள்ளோம்’’ என்றார்.

No comments:

Post a Comment