தெரிந்து கொள்வோம் ஆய்வக பரிசோதனை முடிவுகள் மாறுவது ஏன்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 7, 2021

தெரிந்து கொள்வோம் ஆய்வக பரிசோதனை முடிவுகள் மாறுவது ஏன்?

மருத்துவ பரிசோதனை முடிவுகளை பொறுத்த அளவில், பரிசோதிக்கும் ‘லேப்’களை பொறுத்து இயல்பான முடிவுகளிலும் அசாதாரணமான முடிவுகளிலும் சிறிதளவு மாற்றம் இருக்கும். 

காரணம், பரிசோதனை செயல்முறை, தரக்கட்டுப்பாடு, நோயாளியிடமிருந்து ரத்தம், மலம் அல்லது சிறுநீரை பெற்று எவ்வளவு நேரம் கழித்து பரிசோதிக்கிறார்கள் என்ற விவரம் போன்ற பல அடிப்படைக் கூறுகளை வைத்தே முடிவுகள் அமையும். இதனால்தான் ஒவ்வொரு ஆய்வுக்கூடத்திலும் பரிசோதனை முடிவுகளைத் தரும்போது, கூடவே அங்கு செய்யப்பட்ட பரிசோதனைகளின் இயல்பான அளவுகளையும் கொடுக்கிறார்கள். 


அடுத்ததாக மருத்துவ பரிசோதனைக்கூடங்களில் இப்போது தானியங்கி கருவிகள் வந்துவிட்டன. ஒவ்வொரு மையத்திலும், அவர்கள் பயன்படுத்தும் கருவியைப் பொறுத்து, குறிப்பிட்ட அளவீட்டுக்குத் தினமும் காலையில் செம்மைப்படுத்துவார்கள். அதாவது காலிப்ரேஷன் செய்வார்கள். இது, எல்லோருக்கும் பொதுவான இயல்பு அளவாக இருக்க வேண்டும். பரிசோதனை முடிவுகள் இந்த அளவீட்டையும் கருவியையும் பொறுத்தே அமையும். 


இந்த அளவு மாறும்போது, பரிசோதனை முடிவுகளும் மாறுபட வாய்ப்பு உண்டு. சில நேரம், பரிசோதனைகளை முறையாகச் செய்யாவிட்டாலும், பரிசோதனைகளை.தாமதமாகச் செய்தாலும் முடிவுகள் வித்தியாசப்படும். உதாரணத்துக்கு, ரத்தப் பரிசோதனையின்போது, ரத்த மாதிரியைச் சேகரித்து வெகுநேரம் ஆகிவிட்டால், பரிசோதனை முடிவு துல்லியமாக இருக்காது. நோயாளிகள் பலரும், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் - தாங்களாகவே 

பரிசோதனைக் கூடங்களில் ரத்தச்சர்க்கரையைப் பரிசோதித்துவிட்டுப் பழைய மாத்திரைகளையே சாப்பிட்டு வருகிறார்கள். இது சரியல்ல. அவசரத்துக்கு வேண்டுமானால் ஒரு முறை தாங்களாக ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்துக்கொள்ளலாம். இதையே வழக்கப்படுத்தக் கூடாது. இதில் பல ஆபத்துகள் உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோயால் வரக்கூடிய வேறு நோய்களை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது இதனால் தடைபடும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

No comments:

Post a Comment