தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது. காரணம் என்ன? என்பதற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார்.
அமைச்சர் கடிதம்
புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாகவும், இணையவழி கல்வி குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக காணொலி காட்சி கூட்டம் நடத்த மத்திய கல்வி துறை அமைச்சகம் முடிவு செய்தது.
இந்த கூட்டத்தில் மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் அரசின் கருத்துகள், பரிசீலனைகளை தெரிவிக்க அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய கல்வி துறை அமைச்சகத்துக்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 2 தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.
MUST READ
தமிழக அரசு புறக்கணித்தது
மத்திய கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி, காணொலி காட்சி மூலமாக ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தியது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு, மத்திய கல்வித் துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்மொழிக்கொள்கை
தேசிய கல்விக்கொள்கையை பார்க்கும்போது குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ திணிக்க பார்க்கிறார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது. இதை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.
அதேபோல், அண்ணா கொண்டுவந்த, கருணாநிதி பாதுகாத்து வந்த இருமொழி கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக மும்மொழி கொள்கை இருப்பதாகவும் கூறி இருந்தோம்.
பங்கேற்காதது ஏன்?
அதேபோல் இட ஒதுக்கீடு பற்றியும் இந்த கல்விக்கொள்கையில் எதையும் குறிப்பிடவில்லை. இதுபோன்ற கருத்துகளை அமைச்சராக அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவிக்க, முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதுதொடர்பான கடிதத்தையும் நாங்கள் அனுப்பி இருந்தோம். ஆனால் எந்த பதிலும் அதற்கு கிடைக்கவில்லை. ஆகவே நாங்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தி.மு.க. எந்த விஷயத்தை கையில் எடுத்தாலும் கொள்கை மாறாமல், கருத்து மாறாமல் இறுதிவரை போராடும். நாங்கள் மத்திய அரசுடன் சண்டை போடவில்லை. தொடர்ந்து எங்களுடைய கருத்துகளை சொல்லும் வகையில் தான் எங்களுடைய செயல்பாடு இருக்கும்.
எங்களுடைய கடிதத்தை தாமதமாக பார்த்து எங்களை அழைத்தாலும், நாங்கள் எங்களுடைய கருத்துகளை தெரிவிக்க தயாராக இருக்கிறோம். அதேபோல் முதல்-அமைச்சருடன் கலந்துபேசி எங்களுடைய கருத்துகளை மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப முயற்சிப்போம். நாம் சொல்லும் திருத்தங்களை செய்தால் மட்டும் தான், தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment