பேராவூரணி அருகே, 3.5 அடி உயரமுள்ள சிறுவன், தற்காப்பு கலை போட்டிகளில், பதக்கங்களை குவித்து வரும் நிலையில், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, நிதி உதவியை எதிர்பார்க்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, செருவாவிடுதி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ், 39; மனைவி மாரியம்மாள்.மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் நிகேசன், 14.இவர், சித்துக்காடு அரசு நடுநிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். 24 கிலோ எடை, 3.9 அடி உயரத்துடன், சரியான வளர்ச்சி இல்லாத நிகேசன், ஆறாம் வகுப்பிலேயே, பள்ளியில் நடந்த தற்காப்பு கலை பயிற்சியில் சேர்ந்தார்.
அவருக்கு பயிற்சி அளித்த திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த, வனப்புலிகள் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி பள்ளி ஆசிரியர் ஷேக் அப்துல்லா என்பவர், நிகேசன் திறமையை பார்த்து, தற்காப்பு கலையில், தொடர்ந்து அவருக்கு பயிற்சி அளித்தார். இதையடுத்து, ஹரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், வெள்ளி, சென்னை மற்றும் நாமக்கல்லில் நடந்த, மாநில அளவிலான குத்துச்சண்டை மற்றும் கராத்தே போட்டிகளில், இரண்டு வெள்ளி, திருச்சியில் நடந்த மாநில அளவிலான ஜூடோ போட்டியில், ஒரு தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
அடுத்த மாதம், ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும், தற்காப்பு கலை சங்கத்தினர் நடத்தும் போட்டியிலும் பங்கேற்க நிகேசன் தகுதி பெற்றுள்ளார். ஆயினும், போதிய நிதி வசதி இல்லாமல், தவித்து வருகிறார்.
பயிற்சியாளர் ஷேக் அப்துல்லா கூறுகையில், ''சாதிக்க, உயரம் ஒரு தடையில்லை என, தன்னம்பிக்கையாக விளையாடி வருகிறார். பல போட்டிகளில் நண்பர்கள் உதவியுடன், நிகேசன் பங்கேற்றுள்ளார்,'' என்றார்.சிறுவனுக்கு உதவ - 63794 00288 என்ற எண்ணில் அழைக்கலாம்.
No comments:
Post a Comment